பக்கம்:அணியும் மணியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

அவள் அணியிழந்த தோற்றத்தையும் கோலம் கொள்ளாக் கொள்கையையும் உணர்த்துகிறார். மேலும் கண்ணகியின் தனிமையான நிலையைச் சொல்லும் பொழுது அவள் தன் மேனியை அழகு செய்த பல அணிகளை இழந்து நின்றாள் என்று கூறுவதோடு அமையாமல், முகத்தை மலரச்செய்யும் முறுவலையும் மறந்தாள் என்று நகைமுகம் மறைத்த செய்தியையும் உடன் உணர்த்துகிறார். கோவலன் அவளோடு இருந்து அவளுக்கு மகிழ்ச்சியூட்டவில்லை யென்பதை, ‘தவளவாள்நகை கோவலனிழப்ப’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். கோவலன் எதிரில் மாதவி இருந்தாள் என்று கூறிய அவர், கண்ணகிமுன் கோவலன் இல்லை என்பதையும் உடன் உணர்த்துகிறார்.

பவள வாணுதல் திலக மிழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி

என்று காதலனைப் பிரிந்து அவள் அடைந்த வேதனையைக் காட்டுகின்றார். ஆர்வ நெஞ்சிற் கோலங்கொண்ட மாதவியின் கோல்த்தை அவனால் காணமுடிந்ததேயன்றிக் கோலம் இழந்த கண்ணகியின் கையறு நெஞ்சை அவனால் காணமுடியவில்லை என்பார் போலக் “கோலங்கொண்ட மாதவி” என்றும், “கையறு நெஞ்சத்துக் கண்ணகி” என்றும், முறையே மாதவியையும் கண்ணகியையும் சித்திரித்துக் காட்டுகின்றார்.

கண்ணகியைப் பாராட்டும் கோவலன் உரைகளிலும் இறுவேறு நிலைகளைக் காட்டுகின்றார். மணவினை முடிந்து இன்பவாழ்வு தொடங்கும்போது காதல் உணர்வில் பாராட்டிய பாராட்டுரைக்கும் வாழ்க்கையின் நெருங்கிய பழக்கத்தால் பண்பு அறிந்து பாராட்டும் பாராட்டுதலுக்கும் வேற்றுமை அமைத்து, முதலில், தொடங்கிய பாராட்டுரையை முடிவில் கூறும்