பக்கம்:அணியும் மணியும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

போலத் துன்பத்தால் துவண்டாலும் மனம் முறிந்து போகாத இயல்பு பற்றியும், கொழுகொம்பு நாடித் தழுவி நிற்கும் கொடியைப்போலக் கொழுநனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் இயல்பு பற்றியும், ‘கொடியே’ என்றும், இனி அவள் மலர்ச்சி பெரும் வாழ்வு வாழவேண்டும் என்ற அவன் கொண்ட நல்லெண்ணத்தால் ‘புனைபூங்கோதாய்’ என்றும், நாணமே துணையாக அவள் துன்பத்தைத் தாங்கிய இயல்பு பற்றி ‘நாணின் பாவாய்’ என்றும், தன் இருண்ட வாழ்வில் அவள் ஒளிவிளக்காக விளங்கும் இயல்பு பற்றி 'நீணில விளக்கே என்றும், கற்பின் சிறப்பால் அவள் அடைந்துள்ள பொற்பின் சிறப்பைப் பாராட்டிக் ‘கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி’ என்றும் பாராட்டுகிறான். இப் பாராட்டுரைகளிலெல்லாம் அவள் பண்பின் சிறப்பே இடம் பெற்றிருக்கின்றது. முதலில் அவன் கண்டுணர்ந்த புறத்தோற்றக் காட்சி நலனைமட்டும் நவிலும் அன்புரையாகவும், இறுதியில் பழகியுணர்ந்த பண்பு அவள் பண்பை உணர்ந்து பேசும் பண்புரையாகவும் அமைய, இரு வேறு காட்சிகளில் அவள் மாட்சிகளை உணருகிறான்.

பாண்டியன் ஆட்சியில் ஏற்பட்ட கொடுங்கோன்மையை விளக்கும் பொழுது சோழநாட்டின் செங்கோன்மையைச் சிறப்பிக்கக் காண்கிறோம். புகுந்த இடத்தில் நடந்த கொடுமையை விளக்கத் தான் வாழ்ந்த இடத்தின் செம்மயைக் கண்ணகி உணர்த்துகிறாள். பாண்டியன் அவைக்களத்தில் அவன் இழைத்த கொடுமையை எடுத்துக் காட்டச் சோழநாட்டு மன்னவர்களின் செங்கோன்மை குன்றாமாட்சியை எடுத்துக் கூறுகின்றாள்:

தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்