பக்கம்:அணியும் மணியும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கெட்டாயோ?” என்று கேட்கிறான். நீயும் என்னைப்போல உன் காதலியை இரவில் தவிக்கவிட்டு வந்தாயோ? அதனால்தான் இன்னது செய்வது என்று தெரியாமல் போகிறாய்; வருகிறாய்; புரண்டு விழுந்து இரங்கி வருந்துகிறாய். நாவும் வாயும் குழற நடுங்குகிறாயோ” என்று கேட்கிறான்.

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கலியே! மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று —356

என்று, தனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் கடலின் அலைகளில் காணும் அழகு, புலவரின் கற்பனைச் சிறப்பைக் காட்டுகிறது. நாவாய் என்பதற்கு மரக்கலம் என்று மற்றொரு பொருளும் அமையச் சிலேடையணி சிறக்க அமைந்திருப்பது சொல் நயத்தை உண்டாக்குகிறது.

நளன் தமயந்தியோடு தன் நாடு திரும்பிச் சூதால் இழந்த உரிமையை மறு சூதாடி வென்று நாட்டாட்சியைப் பெற்ற நிலைமையில் மக்கள் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லும் பொழுது, தக்க உவமைகளை எடுத்தாள்வதும் அவற்றைக் கூறும் முறையும் சிறப்பாக அமைந்துள்ளன. “பார் பெற்று மாதோடு திரும்பிய நளனைக் கண்ட மக்களின் மகிழ்ச்சியைத் தக்க உவமையால் எப்படிக் கூறுவேன்?” என்று சொல்லும் சிறப்பு அழகாக அமைந்திருக்கிறது.

கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாள்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ — பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்? — 425

என்று கூறுகின்றார்.