பக்கம்:அணியும் மணியும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

நற்றிணைப் பாடல் ஒன்று காட்டுகிறது. அவர்கள் அன்பு அவர்கள்பால் மட்டும் பரவாமல் பெற்ற மகனிடத்தும் உற்ற உறவினரிடத்தும் பரவுகிறது. இச் செய்தியை இப்பாடல் நன்கு காட்டுகிறது. கார்காலம் வந்துவிட்டதை உணர்ந்து தலைவன் குறித்த காலத்தில் வீடுதிரும்ப விழைகிறான். அதனால் தேரினை விரைவில் செலுத்துமாறு பாகனை ஏவுகிறான். வீட்டில் விடியற்காலையில் தன் மனைவி குழந்தையை எழுப்பி இன்னுரையாடும் இனிய சொற்களைக் கேட்க அவன் அவாவுகிறான். தலைவி விருந்து விரும்புவள் ஆதலின், அவன் விரைவிற் சென்று, விருந்தினரை ஏற்ற இல்லறம் சிறப்புற நடைபெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான். அதனால் அவன் மனம் தலைவியை மட்டும் நாடாமல் மகனிடத்தும் இருவரும் இருந்து வரவேற்கும் விருந்தினரிடத்தும் பரவுகிறது என்று அறிய முடிகிறது.

செல்க பாக! நின் செய்வினை நெடுந்தேர்;
விருந்து விருப்புறுஉம் பெருந் தோள் குறுமகள்
........................................................
பூங்கண் புதல்வன் தூங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அந்தீம் கிளவி கேட்க நாமே
- நற்றிணை, 221


குழந்தையையும் தாயையும் ஒருசேரக் காண வேண்டும் என்ற அவன் அன்பு நெஞ்சம் அவாவுகின்றது. இல்லறத்தின் மாட்சியை நன்குணர்ந்த தலைவன் விருந்தினரை வரவேற்பதில் தலைவி கொண்டுள்ள விருப்பைக் குறிப்பிடுகின்றான். தான் இல்லாமல் அவள் தனியாக விருந்தினரைப் போற்ற முடியாதே என்பதால், விரைவில் செல்லவேண்டும் என்று அவன் விரும்புகிறான். பண்பட்ட அவன் உள்ளம் தன் அன்பை எதிர்பார்க்கும் மனைவியிடத்தும், இருவரும் வளர்க்கும் அன்புச் செல்வமாகிய குழந்தையிடத்தும், அவர்கள் இருந்து போற்றும் விருந்தினரிடத்தும் சுற்றி வளர்ந்துள்ளமையை இப்பாட்டுக் காட்டுகின்றது.