பக்கம்:அணியும் மணியும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மக்கள் வாழ்க்கையை அவன்போக்கில் திருப்ப முயல்கிறான் என்று கூறலாம். இதை நோக்க ஆசிரியன் தன்னை ஆசானாக மட்டும் கருதிக் கொள்ளாமல் உலகத்தின் துன்பத்தையும் மனிதரின் ஒழுக்கக் கேட்டையும் திருத்தி அமைக்கும் சீர்திருத்தவாதியாகவும் மதித்துக் கொள்கிறான். வாழ்வில் ஏற்படும் துன்பத்தையும் இன்பத்தையும் நன்மையையும் தீமையையும் அறத்தையும் மறத்தையும் ஆராய்ந்து எண்ணிப் பார்த்து, அவற்றைப் போக்கத் திண்ணிய கருத்துகளைச் சொல்வதை அவன் கடமையாகவும் கொள்கிறான். உலகமும், வாழ்க்கையைப் பற்றி அக்கவிஞன் கருதும் கருத்து யாது என எதிர்நோக்கிக் கவியின் வாயில் வரும் உண்மைகளை மருத்துவனின் வாயில் வரும் வாக்கைப் போலக் கொள்கின்றது. ஒரு சிலர் அவன் கொள்கைகளையும் கருத்துகளையும் மறுத்து அவற்றில் குறையும் காண்கின்றனர்.

இந்த வகையில், சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரும் தாம் எடுத்துக்கொண்ட நூலாகிய சிந்தாமணியின் கதையையும் அதன் நிகழ்ச்சிகளையும் பயன்படுத்தித் தம் வாழ்வில் கொண்டுள்ள கொள்களைகளைத் தக்க சூழ்நிலைகளில் புகுத்திப் பிறர் அவற்றைச் செவிமடுத்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்துவிடுகிறார். மற்றைய கவிஞர்களைவிட அவரிடம் இப் பண்பு மிகுதியாகக் காணப்படுகிறது.

அவர் எடுத்துக்கொண்ட கதையின் உட்கோளை ஆராய்ந்தால், வஞ்சனை செய்பவர் இறுதியில் வாழ்வு இழப்பர் என்பதாக அமைகிறது. நட்புக்குக் கேடு சூழ்பவர் நன்றி கொன்ற கொடுஞ் செயலுக்கு ஆளாகி அழிவையே பெறுவர் என்பது இக்கதையின் உட்கோளாகக் கிடக்கிறது.

மன்னனாகிய சச்சந்தனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிச் சூழ்ச்சியால் சிறப்புற்ற அவனுடைய அமைச்ச-