பக்கம்:அணியும் மணியும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

னாகிய கட்டியங்காரனின் வீழ்ச்சியைக் காட்டும் பொருட்டே சீவகனின் பிறப்பு வரலாறு எழுகிறது. சீவகன் வளர்ந்து தன் தந்தையைக் கொன்ற கயவனைப் பழிதீர்க்கும் செய்தி இறுதியில் கூறப்படுகிறது. கதையின் நீதியும் வஞ்சனை செய்வார் வாழ்விழப்பர் என்பது ஆகும். இக்கொள்கையில் இவருக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது என்பது இவர் எடுத்துக் கொண்ட கதையால் நன்கு விளங்குகிறது. ‘நட்பிடைக் குய்யம் வைத்தான் நரகம் நண்ணுவான்’ என்ற செய்தியை ஓர் அமைச்சன் நல்லுரையில் வைத்தும் கூறுகின்றார்.

காவியத் தலைவனாக எடுத்துக்கொண்ட சீவகனின் வாழ்க்கையில் ஒரு புதுமை காணப்படுகிறது. எண்மரைத் திருமணம் செய்துகொண்டு இன்பவாழ்வு வாழும் தலைவனாக அவன் காட்டப்படுகிறான். தமிழ்க் காவியங்களுள் எந்தத் தலைவனுக்கும் இத்தகைய இன்பவாழ்வு கூறப்படவில்லை. மேலும் இந்தக் கதையமைத்த ஆசிரியரோ வாழ்க்கையில் துறவியாக விளங்கியவர்; கூறும் செய்தியோ திருமணத்தைப் பற்றியதாக இருக்கிறது; அதிலும், எண்மரைத் திருமணஞ் செய்துகொண்ட வரலாற்றை எடுத்துச் சொல்லும் எழில்மிகு காவியமாக்கிக் காதற்சுவையும் கற்பனைத் திறனும் கலந்து அமைத்து இன்பச் சுவைக்கு எடுத்துக்காட்டாக இந்நூலை அமைத்துள்ளார். இவற்றோடு இக் கதையமைப்பை முடித்து விட்டு இருப்பாரானால் அங்கே அவர் கவிதைத் திறனை மட்டும் கண்டிருக்க முடியுமேயன்றிக் கவிஞனைக் கண்டிருக்க வியலாது.

சீவகன் எட்டுமணம் செய்துகொண்ட போதும் அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் துறவுநெறி என்று அமைக்கும் பொழுதுதான் கவிஞனின் கொள்கை வெளிப்படுகிறது. எட்டு மணஞ் செய்தும் அவ்வாழ்வை விட்டதில்தான் அவனுக்கு வீடுபேறு கிடைத்தது என்று காட்டியதில்தான் அவர் கொள்கை சிறக்கிறது.