பக்கம்:அணியும் மணியும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

வரின் துன்பத்தைக் குறைத்துக் கொள்ள வழிசெய்கின்றனர் என்று கூறலாம். கேமசரியின் துன்பத்தையும் விசயமாதேவியின் துயரத்தையும் குறைக்க வாழ்வின் நிலையாமைத் தன்மை கூறப்படுகிறது.

இவ்வாறு நூலில், ஆங்காங்குத் தக்க சூழ்நிலைகளில் வாழ்க்கையில் ஈடுபடும் பலநெறிகளில் உள்ளார்க்கும் பயன்படும் வகையில் அறங்களையும் சமயக் கருத்துகளையும் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய உயர்ந்த நீதிகளையும் ஆசிரியர் உணர்த்தக் காண்கிறோம்.

இந்தக் கொள்கைகளைப் பிறர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கவிஞன் அவற்றைச் சொல்லித் தீர்த்தால்தான் மனநிறைவு அடைகிறான் என்று கூறலாம். மற்றவர்கள் இக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை யல்ல என்று மறுத்தாலும், அதைப் பற்றி அவன் பொருட்படுத்துவதில்லை. சுவையையும் நலத்தையும் நூகர்வதற்கு உரிமை இருப்பதைப் போலவே அவர்களுக்குப் பிடிக்காத கொள்கைகளைப் புலவனின் தனிப்பட்ட நம்பிக்கைகள் என்று தள்ளவும் உரிமை இருக்கிறது. எனினும் கொள்கையை நீக்கிவிட்டு அணியும் நலனும் மிக்க காவியமாக மட்டும் உயர்ந்த கவிஞனால் அமைக்க இயல்வதில்லை. கவி வேறு கவிஞன் வேறு என்று பிரிந்து வாழ அவனால் இயல்வதில்லை.