பக்கம்:அணியும் மணியும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

பிறர்க்காக முயலும் பெரியோர்கள் இருப்பதால்தான் இவ்வுலக இயல்பு கெடாமல் இருக்கின்றது என்ற கருத்தை வற்புறுத்துகிறது. இப்பாடல் அத்தகைய நல்லோர்களின் இயல்புகளைப் பற்றி விரித்துச் சொல்கிறது.

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், அவர் தமியராக உண்ணார்; யாரோடும் வெறுப்புக்கொள்ளார்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதுதீர்தற் பொருட்டுத் தம்மாலான முயற்சியைச் செய்வார்; புகழுக்காகத் தம்முயிரையும் கொடுத்துவிடுவர்; பழி வருவதாக இருந்தால் அதனால் உலக முழுவதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை கொள்ளார். இத்தகைய மாட்சிகள் நிறைந்தவர் சான்றோர்” என்று அவர்தம் இயல்பை எடுத்துக் கூறுகின்றது.

உண்டால் அம்மஇவ் வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலாேமுனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞசிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே - 182

என்பது அப்புறப்பாடலாகும்.

இந்தக் கருத்தை மேலும் வற்புறுத்துவது போல மற்றொரு பாட்டு அமைந்திருக்கிறது. தனிமனிதனின் வாழ்வுக்குக் குடும்பம் எவ்வளவு இன்றியமையாததோ பொது வாழ்வுக்கு அரசியல் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவிற்குச் சான்றோரின் தொடர்பு உள்ளத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று பிசிராந்தையாரின் பாட்டொன்று