பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ix

அத்தியாயத்தில் அணுவின் அற்புத ஆற்றல்லைப் பற்றியும் அவ்வாற்றல் மக்கள் நலனுக்கு எவ்வாறு பயன்படக்கூடும் என்றும் பொதுவாக கூறப்பெற்றுள்ளன. இரண்டாவது அத்தியாயம் நுண்ணனுப் பெருக்கியாலும் காணமுடியாத அதிநுட்பமான அணுவின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவு விளக்கமாக எடுத்தியம்புகின்றது. ஆற்றலின் தன்மையையும் வகைகளையும் ஓரளவு நன்கு அறிந்து கொண்டால்தான் அணுவாற்றலின் அற்புதப் பயன்களைப் புரிந்துகொள்ளக் கூடும் என்ற நோக்கத்துடன் மூன்றாவது அத்தியாயத்தில் அதனை ஒரு சிறிது விளக்கியுள்ளேன். நான்காவது அத்தியாயத்தில் அணுவின் உட்கருவிலடங்கிய ஆற்றலும் அதனை வெளிப்படுத்துவதற்குக் காரணமாகவுள்ள தொடர்நிலை விளைவும் விளக்கப் பெற்றுள்ளன. ஐந்தாவது அத்தியாயத்தில் அணு எரியைகளாகப் பயன்படும் பொருள்கள் இன்னவை என்றும், அவற்றுள் முக்கியமாகவுள்ள யு-235 எவ்வாறு தூய்மைப்படுத்திப் பிரிக்கப்பெறுகின்றது என்பதும் விளக்கமாக உரைக்கப்பெற்றுள்ளன. அணு உலைகளைப்பற்றி ஆறாவது அத்தியாயம் விளக்குகிறது. நவீன வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாகவுள்ள மின்னாற்றலைக் குறைந்த விலைக்கு எவ்வாறு அணு உலைகளிலிருந்து பெறக்கூடும் என்பதையும் அணுவாற்றல் நிலையங்களை அமைப்பதையும் ஏழாவது அத்தியாயம் எடுத்தியம்புகின்றது. எட்டாவது அத்தியாயம் கதிரியக்கம் இன்னது என்பதையும், அதன் தன்மைகளையும் விளக்கிக் கூறுகின்றது. ‘அங்கு இங்கு எனாதபடி எங்கும்’ எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தவல்ல அற்புத சஞ்சீவி போல் உள்ள கதிரியக்க ஓரிடத்தான்களின் வகைகள், அவற்றின் பண்புகள், ஓரிடத்தான்களின் உற்பத்தி ஆகியவைபற்றி ஒன்பதாவது அத்தியாயத்தில் ஓரளவு விளக்கியுள்ளேன். அணு ஆராய்ச்சித்துறையில் பயன்படும் கருவிகளின் அமைப்பும் அவை பயன்படும் முறையும் பத்தாவது அத்தியாயத்தில் விளக்கப்பெற்றுள்ளன. அணுவாற்றல் உயிரியலில் ஆராய்ச்சி முறையில் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை பதினொன்றாவது அத்தியாயத்தில் ஓரளவு விரிவாக விளக்கியுள்ளேன். இந்த ஆராய்ச்சியின்