பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அணுவின் ஆக்கம்


சத்தம் அதிகமாகிறது. இக்காரணத்தால் மின்னாற்றலின் விலையும் அதிகமாகிறது. இத்தகைய பகுதிகளில் தொழில் வளர்ச்சி தடைப்படுதல் கூடும். யுரேனிய நிலையத்தில் இக் குறை தவிர்க்கப்பெறுகின்றது. அதிகமான ஆற்றலை விளைவிக்கக் குறைந்த அளவு யுரேனியமே தேவை ; அதைக் கொண்டு வருவதற்கு ஏற்படும் வண்டிச் சத்தமும் மிகக் குறைவு. தொழில் வளர்ச்சியில் பிற்போக்குள்ள பகுதிகள் யுரேனிய ஆற்றலைப் பயன்படுத்திப் பெரு நன்மை அடையலாம்.

யுரேனிய இயந்திரங்கள் கனமாக இருப்பதால் மோட்டாரைப் போன்ற சிறு வண்டிகளிலும், விமானங்களிலும் பயன்பட வழியில்லை. குறைந்த எடையுள்ள இயந்திரங்கள் அமைக்கக் கூடுமானால், இவற்றில் பயன்படலாம். ஆயினும், பெருங் கப்பல்களில் இவை பயன்பட வழியுண்டு. குறைவான அளவு யுரேனியத்தைக் கொண்டு நெடுந் தொலைவு வண்டிகளை இயக்கலாம். எரியைகளின் எடை குறைவதால், இயந்திரத்தின் கனம் ஒருவாறு ஈடு செய்யப் பெறுகின்றது. எதிர்காலத்தில் இவை நெடுந்தொலைவு விமானங்களில் பெரு வழக்காகப் பயன்படுதல் கூடும். இவ்விமானங்கள் எண்ணெய்க்காக அடிக்கடி விமான நிலையங்களை அடைய வேண்டியதில்லை.

எதிர்காலத்தில் கணிப்பொருள்களை வெட்டி எடுப்பதில் வெடி மருந்துக்களுக்குப் பதிலாக யுரேனியத்தைப் பயன்படுத்தலாம். யுரேனியச் சிதைவினால் பெரும் அணுவாற்றலைப் பயன்படுத்தி மலைகளையும் தோண்டி எடுக்கலாம். எதிர்காலத்தில் கணித் தொழில்களில் புரட்சிகரமான மாறுதல்கள் நிகழலாம். இன்று இரஷ்யாவில் மலைகளைப் பிளக்க அணுவாற்றல் பயன்படுத்தப் பெறுகின்றதாக அறிகின்ரறோம்.