பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அணுவின் ஆக்கம்


ஜூன் திங்கள் 27-ஆம் நாள் 5,000 கிலோவாட் அணு நிலையம் ஒன்று தொழிற்சாலைக்குப் பயன்படும் முறையில் நிறுவியிருப்பதாக அறிவித்ததைச் செய்தித் தாள்களில் கண்டோம். அதிலிருந்து உற்பத்தி செய்யப்பெறும் மின்னாற்றல் அதற்கருகிலுள்ள மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கும் உழவுத் தொழிலுக்கும் உபயோகப்படுத்தப் பெறுகின்றதாம், 1955-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் இரஷ்ய நாட்டில் மின்சார அமைச்சராக இருந்த திரு. ஜி. எம். மாலென்கோவ்[1] என்பார் 50,000 கிலோபோட் ஆற்றல் நிலையம் ஒன்று விரைவில் நிறுவப்பெறும் என்றும் அறிவித்ததையும் பத்திரிகைகளில் படித்தோம். இங்கிலாந்து நாட்டில் 50,000 கிலோவாட் ஆற்றல் நிலையம் ஒன்றை நிறுவப் பல ஆண்டுகளாக வேலை நடைபெற்று வருகின்றது ; அது மிக விரைவில் செயற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பெறுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 60,000 கிலோவாட் ஆற்றல் நிலையம் ஒன்று செயற்படத் தொடங்கியிருக்கின்றது. பிரெஞ்சு நாடு, கானடா, நார்வே, ஹாலந்து, பெல்ஜியம், ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் தொழிற்சாலைக்குப் பயன்படும் முறையில் ஆற்றல் நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

வணிகத் துறையில் பெரிய அளவில் மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம் என்ற நம்பிக்கை அமெரிக்க ஐக்கிய நாட்டு காட்டிலஸ்[2] என்ற நீர்மூழ்கிக் கப்பல் வெற்றிகரமாக இயங்கியதிலிருந்து பிறந்தது. இதில்தான் முதன் முதலாகப் பெரிய 'அணு ஆற்றல்' நிலையம் ஒன்று அமைக்கப்பெற்றது. அது செயற்படுவதற்குரிய செலவு எவ்வளவு ஆகும் என்று தெரிவதற்கு முன்னர் அது நிறுவப்பெற்றது. கடலில் உபயோகப்படக்கூடியதாலும், அதன் பொறிகளுக்குக் காற்றே தேவையில்லாததாலும், அந்தக் கப்பல் நீண்ட காலம் கடலின் அடியிலேயே இருக்கக் கூடுமாதலாலும் செலவைப் பற்றிய கவலை ஏற்படவில்லை. போர்க்காலத்தில் இன்னொரு


  1. ஜி. எம். மாலன்கோவ் - G. M. Malenkov.
  2. நாட்டிலஸ் - Nautilus