பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அணுவின் ஆக்கம்


நேர் மின்னிகளும்16 வெளிவருகின்றன. இதற்குக் காரணம் என்ன ? அணுக்கள் வெடிக்கும்பொழுது சிற்சில சமயம் உருவ மாறுபாடுகள் நிகழ்கின்றன. நேர் இயல் மின்னி பொது இயல் மின்னியாக மாறி ஒரு நேர் மின்னியை வெளிவிடுகின்றது ; அதைப்போலவே, பொது இயல் மின்னியும் நேர் இயல் மின்னியாக மாறி ஓர் எதிர்மின்னியை வெளிவிடுகின்றது. இவற்றின் பொருள்-திணிவு மிக மிகக் குறைவாக இருப்பதால் இவை பெருவேகத்துடன் வீசியெறியப்படுகின்றன, வெளியே தள்ளப்பெறும் எதிர்மின்னிகள் பீட்டா - கதிர்கள் என்ற பெயரால் வழங்கப் பெறுகின்றன என்பதை நாம் அறிவோம்.

எஞ்சிய ஆற்றல் : அணுவிலிருந்து வெளித் தோன்றும் ஆற்றல் முழுவதும் ஆல்பா-துணுக்குகளையும் பீட்டா-துணுக்குகளையும் வெளியே தள்ளுவதில் செலவழிந்து போகாமல் இருக்கலாம். அவ்வாறு எஞ்சிய ஒரு பகுதியாற்றல் கதிர் வீச்சாக வெளியே வருகின்றது. இந்தக் கதிர்வீச்சுகளைத்தான் நாம் காமா-கதிர்கள் என்று வழங்குகின்றோம். இதை ஒர் எடுத்துக்காட்டால் தெளிவாக விளக்கலாம். ஒரு மனிதனுக்குக் கோபம் மிக அதிகமாக வருகிறது. அந்தக் கோபவெறியில் அவன் தன் கையில் அகப்பட்ட புத்தகங்களை வீசி எறிகின்றான் , பென்சில்களை வீசி எறிகிறான் ; மிகவும் படபடப்பாகவும், உரக்கவும், கடுமையாகவும் பேசுகின்றான். புத்தகங்களை ஆல்பாதுணுக்குகளுக்கும், பென்சில்களை பீட்டா-கதிர்களுக்கும் படபடப்பான சொற்களைக் காமா-கதிர்களுக்கும் ஒருவாறு ஒப்பிட்டுவைக்கலாம்.


16 நேர்மின்னி - positron. இது பொருள் - திணிவு அளவிலும் மின்னூட்ட அளவிலும் எதிர்மின்னியை ஒத்துள்ளது. மின்னூட்டத்தின் தன்மையில் மட்டிலும் எதிர்மின்னிக்கு நேர்மாறாகவுள்ளது. அஃதாவது, நேர் மின்சாரத்தைக் கொண்டுள்ளது.