பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

அணுவின் ஆக்கம்


கொணர்ந்து பல்வேறு வரைப்படங்கள்2 வரைந்து காட்டப் பெற்றன. கருநிறமுள்ள வட்டங்கள், வெண்மை நிறமுள்ள வட்டங்கள் வரையப்பெற்று அணுவின் இயைபுப் பகுதிகள் விளக்கப் பெற்றன. இவ்வாறு நடைபெற்ற நீண்டதோர் ஆராய்ச்சியில் பத்திரிகையாளர்களில் ஆழ்ந்த அறிவுடைய பலர் பல்வேறு வினாக்களை எழுப்பினர். அவற்றிற்கெல்லாம் விரிவான விளக்கம் தரப்பெற்றது. இறுதியாக வினா விடுத்தல் நிறுத்தப் பெற்றது. இதை விளக்குவதற்காக வந்திருந்த அறிவியலறிஞர்கள் அடுத்த பொருளுக்குச் செல்ல விரைந்தனர். ஆயினும், இன்னும் விளக்கம் பெறாதிருப்போர் ஒன்றிரண்டு வினாக்களை விடுக்கலாம் என்று ஒரு வாய்ப்புத் தந்தனர். முதல் வினாவை எழுப்பிய அன்பர் கையை உயர்த்தி, எழுந்து நின்று, சற்றுக் கனைத்துக் கொண்டு, இதுகாறும் தந்த விளக்கத்திற்குத் தன் பாராட்டுதலைத் தெரிவித்துவிட்டு இவ்வாறு உரைத்தார் : “ஒரு சிறியதொரு பகுதி இன்னும் சரியாக விளங்கவில்லை. ஓரிடத்தான் என்பது என்ன ? திட்டமாக உரைத்திடுமின் !” என்று.

பெரும்பாலான மக்கள் ஓரிடத்தான்கள் என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாத தனால்தான் அவை அணுவாற்றல் வளர்ச்சியின் தொடக்க நிலையிலேயே எவ்வளவு தூரம் மனித நலனுக்குப் பயன்படுகின்றன என்பதை முக்கியமாகக் கொள்ள முடிவதில்லை. அணுவின் கதை என்ற காவியத்தில் ஓரிடத்தான்களின் வரலாறு மிகவும் மகிழ்வூட்டத்தக்க பகுதியாகும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்களைக் குணப்படுத்தவும், நோய்களைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ளவும், உற்பத்தித் துறைகளைத் திறனுடையவையாக்கவும், பயிர்கள் அதிகமான பலனைத் தரவும், கால்நடைப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள் போன்றவை அபிவிருத்தி அடையவும் அவை பெரிதும் பயன்படுகின்றன. ஓரிடத்தான்களைப்பற்றிய துறையில் முறியடிக்கப்பட வேண்டிய கொள்கை யொன்றும் இல்லை :


2 வரைப் படங்கள்-diagrams. 'இயைபுப் பகுதிகள் - constituent parts.