பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

149


அளவு கதிரியக்கத் தனிமம் அந்த அளவில் பாதியாக மாறுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம். அப்பொருள் நிலைத்திருக்கும் தன்மையைப் பெறும்வரை இக்கிரியை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கிராம்30 எடை ரேடியம் அரை கிராம் எடை ரேடியமாகக் சிதைந்தழிவதற்கு 1600 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 ஆண்டுகளாகும். இவ்வாறே யுரேனியத்தின் அரை-வாழ்வு 4000 மிலியன் யாண்டுகள்; அஃதாவது, 40000 இலட்சம் யாண்டுகள். போலோனியத்தின்31 அரை-வாழ்வு 136 நாட்களாகும்.

கதிரியக்கத் தனிமங்களின் அரை-வாழ்வும் கதிரியக்க ஓரிடத்தான்களின் தனி வாழ்வும் மிக விரிந்த நிலையிலிருக்கின்றன. அவற்றின் அரை-வாழ்வு சில வினாடிகளிலிருந்து பல நூற்றாண்டுகள் வரை அமைந்திருக்கின்றன. ஓரிடத்தான்களின் அரை-வாழ்வு அவற்றை நேரடியாகப் பயனுள்ளதாக்குகின்றது. எடுத்துக்காட்டாக, தோரியம்-ஏ என்ற ஓரிடத்தானின் அரை-வாழ்வு ஒரு வினாடியின் சிறு பகுதியில் அடங்கிவிடுகின்றது. இதனால் யாதொரு பயனும் இல்லை. வேறு சில ஒரிடத்தான்களின் அரை-வாழ்வு நிமிடக் கணக்கிலும், மணிக் கணக்கிலும், நாள் கணக்கிலும் அமைந்துள்ளன. அவை பல்வேறு முறைகளில் பயன்படுகின்றன. அவற்றுள் சில: ரேடியம்-சி 19.7 நிமிடங்கள்; நெப்டூனியம்32, 32 மணிகள்; பாஸ்வரம்-17, 14 நாட்கள் அன்றியும், ஆயிரம், பத்து இலட்சம்33 ஆண்டுகள் அரை-வாழ்வுகொண்ட ஒரிடத்தான்களும் உள்ளன. அண்மையில் கண்டறியப் பெற்றவைகளில் ஒன்று அலுமினியம்-26 என்பது; அதன் அரை-வாழ்வு கிட்டத்தட்டப் பத்து இலட்சம் யாண்டுகள் எனக் கண்டறியப் பெற்றுள்ளன. இதுகாறும் கண்டறியப் பெற்ற எல்லாக் கதிரியக்க ஓரிடத்தான்களிலும்


30gram- கிராம் (எடை அளவு). 31போலோனியம்-polonium. 32நெப்டூனியம்-neptunium. 33 பத்து இலட்சம்-million.