பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அணுவின் ஆக்கம்


பயன்படுத்துவதற்குச் சாத்தியமாக இருக்கின்றது. அதனைப் பின்னர்க் காண்போம்.

சில ஆண்டுகளாக தூய்மையான ஓரிடத்தான்கள் பேரெண்ணிக்கையில் கிடைக்கின்றன. நமக்குத் தேவையான தனிமம் அல்லது அதன் வேதியற் கூட்டுப் பொருள்களில்41 ஒன்றினை ஒரு குழல் வடிவத் திறப்பின்42 வழியாக அணு உலையினுள் செலுத்தி ஒரு குறிப்பிட்ட கால அளவு (சில மணி நேரம்) பொது இயல் மின்னியின் தாக்குதலுக்கு43 உட்படுத்தினால் நாம் விரும்பும் கதிரியக்க ஓரிடத்தானைப் பெற முடிகின்றது. இம்முறையில் வேதியற் பண்புகளுக்காகவோ, அன்றி நீண்ட நாட்களுக்கு மந்தமான கதிர்வீசலுக்கோ, அன்றி குறைந்த காலத்திற்குத் தீவிரமான கதிர்வீசலுக்கோ உரிய பிரத்தியேகமான கதிரியக்க ஓரிடத்தான்களை உற்பத்தி செய்ய முடிகிறது. சுழலினிகளில் உற்பத்தி செய்வதைவிட அணு உலைகளில் குறைந்த செலவில் அதிகமான ஓரிடத்தான்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதயும் கண்டறிந்துள்ளனர். 1946க்கும் 1951க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுக்காலத்தில் அமெரிக்க நாட்டில் மான் ஹாட்டன் மாவட்டத்தில்44 ஒக் ரிட்ஜ் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில்45 நிறுவப்பெற்ற அணு உலையில் உற்பத்தியான கதிரியக்க ஓரிடத்தான்களின் அளவு அதே காலத்திற்குள் அந்த நாடு முழுவதிலும் நிறுவப்பெற்றிருந்த கிட்டத்தட்ட ஐம்பது சுழலினிகளில் உற்பத்தியான ஓரிடத்தான்களைவிட நானூறு மடங்கு அதிகம் இருந்தது என்று கணக்கிட்டிருக்கின்றனர். மான்ஹாட்டன் மாவட்டத்திலுள்ள அலுவலதிகாரிகள் அணு வளர்ச்சி ஆராய்ச்சியில் கதிரியக்க ஓரிடத்தான்கள் மிகவும் விலையுயர்ந்த உடன் விளைவுப்பொருள்கள் என்பதை அறிந்தனர். அணுவாற்றல் ஆராய்ச்சியில்


41வேதியற் கூட்டுப் பொருள்-chemical compound. 42குழல் வடிவத் திறப்பு-tubular orifice. 43 பொது இயல் மின்னியின் தாக்குதல்-neutron bombardment.
44மான் ஹாட்டன் மாவட்டம்-Manhattan District. 45 ஒக் ரிட்ஜ் தேசிய ஆராய்ச்சி நிலையம்- Oak Ridge National Laboratory.