பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. அணு ஆராய்ச்சிக் கருவிகள்


வ்வொரு தொழிலாளியும் தன் தொழிலுக்கேற்ற கருவிகளை இயற்றிக் கையாளுகிறான். ஒரு தொழிலுக்குரிய கருவிகளைப் பிறிதொரு தொழிலுக்குப் பயன்படுத்த முடியாது. கடிகாரம் செய்பவனும் கடிகாரத்தைச் செப்பனிடுபவனும் கொல்லனும் தச்சனும் கையாளும் சம்மட்டி, உளி போன்ற கருவிகளைக்கையாண்டு தம் தொழிலைச் செய்ய இயலாது. சின்னஞ்சிறு சக்கரங்களையும் திருகாணிகளையும் மிகவும் நுட்பமாக அமைக்கப்பெற்ற சிறந்த கருவிகளால்தான் செவ்வனே கையாளமுடியும். அதைப்போலவே, கண்ணாலும் சாதாரண ஆய்கருவியாலும் காணமுடியாத நுண்ணிய அணுவின் தன்மையை ஆராயத் தொடங்கிய அறிவியலறிஞர்களுக்கும் பல நுட்பமான கருவிகள் தேவையாகவுள்ளன. அவர்களே பல அதிநுட்பமான ஆய்கருவிகளையும் நுண்ணிய பிற சாதனங்களையும் இயற்றி இத்தேவையை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். அணுவியலில் பயன்படும் கருவிகள் (1) துப்பறியும் கருவிகள்1 (2) தகர்க்கும் கருவிகள்2 என இரு கூறிட்டு வழங்கப்பெறுகின்றன. அந்த இரண்டு வகைக் கருவிகளைப்பற்றி ஒரு சிறிது தெரிந்து கொள்வோம்.


1துப்பறியும் கருவிகள் - detecting tools.2தகர்க்கும் கருவிகள்-attacking tools.