பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

157


திலுள்ள மப்புக்களை நோக்கினர்; அவற்றை ஆராய்ந்தார்; அழகிய நிறங்கள் ஆங்காங்கே தோன்றக்கண்டு அவற்றில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தார். அவற்றைச் செயற்கை முறையில் ஏன் உண்டாக்கக்கூடாது என்று அவர் உள்ளம் வினாவியது; செய்யவும் துடித்தது. உடனே அவருடைய உள்ளம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

கடலருகே நீராவி எழுகின்றது. அது சுற்றுப்புறக் காற்றில் கலக்கின்றது. வெப்பம் மிக்க கோடை காலத்தில் காற்றில் நீராவி அதிகம் கோத்துக் கொள்ளும். அப்பொழுது சுடுநிலை பெருவாரியாகத் திடீரெனக் குளிருமானால் நீராவி பனித்துளியாக மாறுகின்றது. புல்லின் நுனியில் உள்ள பனித்துளியில் வானம் முழுவதும் நிழலிட்டு இருப்பதனைக் கண்டுகளிக்கின்ற நாம் இந்தப் பனித்துளியை எங்ஙனம் மறக்க முடியும் ? இத்தகைய பணித்துளியைச் செயற்கை முறையால் வருவிப்பது எப்படி என்று இயற்கையின் மறை பொருளை அறிய அவாவினார் வில்சன். அணுக்களோ, அன்றி அணுத்திரளைகளோ ஒன்றோடொன்று நெருங்கி மோதிக்கொள்வதே சூடு என்பதை நாம் அறிவோம். இத்தகைய நெருக்கடி நீங்கி, நீராவி புழங்கப் பெரிதும் இடம் பெற்றால் சூட்டுதிலை மாறிக் குளிர்நிலை எழுகின்றது. இவ்வாறு எவ்வளவு இடம் அகன்று வந்தால் பனித்துளி எழும் என்பதனை ஏற்கனவே வில்சன் பரவு வீதக் கணக்கினைக் கொண்டு கண்டறிந்திருந்தார். 10 கன சென்டி மீட்டர் இருந்த இடம் 20 கன சென்டி மீட்டர் ஆனால் பரவு வீதம் இரட்டிப்பாகின்றது. பரவு வீதம் 1.25 ஆகும் வரையிலும் பனி உண்டாவதில்லை. பரவு வீதம் 1.38க்கு மேல் போனால் மூடு பனியும் மப்பும் மந்தாரமுமே போடுமன்றிப் பனியாகத் துளிப்பதில்லை. அதனால்தான் பனிக்காலம் என்று கூறும் பொழுதும் சில நாட்களில் பனியையே நாம் காண்பதில்லை. நகரங்களில் மூடுபனி மிக்குத் தோன்றும். அங்கு எழும் தூசுகளைப் பற்றிக்கொண்டு நீர்த்துளிகள் திரண்டு பரவுகின்றன. எனவே, பனித்துளிகள் திரள வேண்டுமானால், தூசு போன்றதொரு பற்றுக்கோடு அவற்றின் கருவாக அமைதல் வேண்டும்.