பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

167


இரண்டுமே பயன்படுகின்றன. இவ்விசை, துணுக்குகளின் வேகத்தைப் பெரிதாக்குகின்றது. இவ்வேகத்துடன் அத்துணுக்குகள் இலக்காக உள்ள தனிமத்தைத் தாக்குகின்றன. ஆயினும், ஆய்வாளர்கள் பொது இயல் மின்னிகளை இவ்வாறு நேரடியாக வேகம் வளரச் செய்ய முடிவதில்லை. காரணம், அவற்றில் இயந்திரம் பற்றக்கூடிய யாதொரு மின்னூட்டமும் இல்லை. எனினும், வேறு முறைகளில் பெருவேகத்துடன் கூடிய பொது இயல் மின்னிகள் விடுவிக்கப் பெறுகின்றன. பெரும்பாலும் அணு உலைகள் இதற்குப் பயன்படுகின்றன. அணு உலைகளினின்றும் போதரும் பொது இயல் மின்னிகள் மிக உச்சநிலை வேகத்துடன் வெளிப்படுகின்றன.

இச்சாதனங்களின் தந்தை ரதர்போர்டு என்ற அறிவியலறிஞர். அவருடைய 'அணுச்சிதைவு இயந்திரம்'24 மிக எளிதாகவும் பண்படா நிலையிலும் இருந்தாலும், அதனைக் கொண்டே அவர் பல வியத்தகு கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார் ; வேறு பலருக்கும் புதிய துறைகளில் செல்ல வழிகளமைத்துத் தந்தார். இன்று நவீன முறையில் அமைந்த கருவிகளில் முக்கியமானவை இரண்டு உள்ளன. ஒன்று, ராபர்ட் வான் டி கிராப்25 அமைத்த நிலை இயல் மின் ஆக்கி26 , மற்றொன்று, டாக்டர் ஏர்னஸ்டு ஓ. லாரென்ஸ்27 அமைத்த சுழலினி. இவை இரண்டுமே சாதாரணமாக நவீன அணு பீரங்கிகளாகப் பயன்படுகின்றன. இவை இரண்டும் மின் துணுக்குகளைப் பல ஆயிரமாயிரம் எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றலுடன் எறியக்கூடியவைகளாக உள்ளன.

வான்-டி-கிராப் கிலே இயல் மின்னாக்கி : இதன் பெயர் குறிப்பிடுவதுபோல, இக்கருவி மின்சாரத்தைப் படைத்துத் தருகின்றது. அம்மின்சாரம் நிலை இயல் மின்சாரம். பட்டுத்-


24அணுச்சிதைவு இயந்திரம்-atom smashing machine.
25ரா-பர்ட் வான் டி கிராப்-Robert Van de Graaff.
26நிலை இயல் மின் ஆக்கி-electro-static generator.
27டாக்டர் ஏர்னஸ்டு ஓ. லாரென்ஸ்-Dr. Earnest O. Lawrence.