பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அணுவின் ஆக்கம்


கருவோ இருநியோ இந்த எதிர்ப்பையும் அழித்துக்கொண்டு கருவினுள் புகவேண்டுமானால், அது மிகமிக விரைவாகச் சென்று தாக்கவேண்டும். ஆனால், குறைந்த மின்னோட்டச் செலவில் இந்த மாயவித்தையைச் செய்யவேண்டும். இதுவே லாரென்ஸின் நோக்கம்.

கவண்கல் : லாரன்ஸ் கண்ட கருவி மிகமிகப் புதியது. ஆனால், அதன் தத்துவம் மிகமிகப் பழையது. காட்டு மிராண்டியாய் மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் பயன்படுத்திய கவண்கல்லிலிருந்து கற்ற தத்துவம் இது. காட்டு மிராண்டி தோலில் கல்லைவைத்துப் பலமுறை சுற்றுகிறான். இப்படிச் சுற்றுவதால் கல்லின் வேகம் மிகுகின்றது; மிகமிக ஊற்றத்தோடும் பாய்ந்து ஒடுகின்றது. வேகமாகவும் தாக்குகிறது. சிறு கல்லும் மலைபோலத் தாக்குகிறது. இவ்வாறே அணு-ரவைகளையும் சுழற்றி விட்டால் அவை அணுவின் உட்கருவிற்குள் எளிதில் சென்று பாயும் என்று கனவு காண்கின்றார் லாரன்ஸ்; கனவும் நனவாகின்றது.

சுழலினியின் வேலைத் தத்துவம் : சுழலினியின் நடுப்பகுதியில் வெப்பம் மிகுந்த மெல்லிய கம்பி ஒன்று இருக்கிறது. அதிலிருந்து எதிர்மின்னிகள் வெளியே வருகின்றன. வெற்றிடமாக்கப்பெற்ற ஒரு பெட்டியில் புகுத்தப்பெற்ற வாயுவின் அணுக்களின் கூட்டங்களின் மேல் இவை மோதுகின்றன. இந்த வாயு சிறிதளவு இருந்தாலே போதுமானது. இவை மோதியதால் வாயுவின் அணுக்களிலிருந்து சில எதிர்மின்னிகள் வெளியே தள்ளப்பெறுகின்றன. அப்பொழுது நேர் மின்னுரட்டம் உடைய அயனிகள் உண்டாக்கப் பெறுகின்றன, வெற்றிடமாகவுள்ள இடத்தில் நீரியத்தைப் புகுத்தினால் நேர் இயல் மின்னிகள் அணு-ரவைகளாகக் கிடைக்கும். டியூட்டிரியத்தை உபயோகித்தால் இருநிகள் கிடைக்கும். பரிதியத்தைப் பயன்படுத்தினால் ஆல்பா - துணுக்குகள் கிடைக்கும். அப்படி வெளிப்படும் துணுக்குகளுக்கு அதிக ஆற்றலை அளிப்பதற்கு கருவியில் வேறு சில பகுதிகள் உள்ளன.