பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அணுவின் ஆக்கம்



மேற்கூறிய சிக்கலான பல்வேறு செயல்களிலும் உயிருள்ள அணுத்திரளைகள் சிதைந்து பல்லாயிரக் கணக்கான முறைகளில் திரும்பவும் ஒன்று சேர்கின்றன. ஆயினும், அவை என்றும் தம் மின்சார-சமநிலை23 சிறிதும் கெடாமல் தான் பல முறைகளிலும் ஒன்று சேர்கின்றன. அச் சமநிலை கெட்டால், உயிர்ப்பொருள்கள் கெடும் ; அல்லது சிதைந்து அழியும். கதிர்வீச்சு இக்கேட்டை அல்லது சிதைந்தழிதலை உண்டாக்குகிறது. கதிர்வீச்சு உயிர் வாழிகளின் உடலிலுள்ள அணுக்கள், அணுத்திரளைகள், பிசிதச் சேர்க்கைகள் போன்றவற்றின் நுண்ணிய மின்சார-வேதியல் சமநிலையைத் தாக்கி, சிதைத்து அழித்துவிடுகின்றது. இறுதியாக அது அணுக்களும் அணுத்திரளைகளும் கொண்ட உயிரணுக்களையே கேடுறச்செய்து அவற்றைக் கொன்றுவிடுகின்றது. ஏராளமான உயிரணுக்கள் அழிக்கப் பெறின் உயிரி முழுவதும்-தாவரம், பிராணி, மனிதன் ஆகியவற்றுள் எதுவாக இருப்பினும்-கொடுமையான முறையில் ஊறுபடுகின்றது; அல்லது இறந்து வீழ்கின்றது.

அயனியாக்கும் கதிர்வீச்சு : கதிர்வீச்சு உடலினுள் உயிருள்ள இழையங்களினூடே-செல்லுங்கால் அது அணுக்கள், அணுத்திரளைகள் ஆகியவற்றின் மின்சார- சம நிலையைக் குலைப்பதுடன் மட்டிலும் நின்று விடுவதில்லை; அவற்றைச் சிறுசிறு சில்லுகளாகவும் உடைத்து விடுகின்றது. அச்சில்லுகளில் நேர் மின்னூட்டம்24 அல்லது எதிர் மின்னூட்டம்25 அமைந்துள்ளது. அவை நேர் மின்னூட்ட அயனிகள்26 என்றும், எதிர்மின்னூட்ட அயனிகள் என்றும் வழங்கப் பெறுகின்றன. இவ்வாறு அணுக்களையும் அணுத்திரளைகளையும் அயனிகளாக மாற்றும் கதிர் வீச்சினை 'அயனியாக்கும் கதிர் வீச்சு '27 என்று வழங்குகின்றனர். அயனி என்பது என்ன ? மின்சாரம் சமநிலையில் இருப்பதனை


23மின்சார-சமநிலை-electrical balance. 24நேர் மின்னூட்டம்-positive charge. 25எதிர் மின்னூட்டம்-negative charge. 26அயனி-ion 27அயனியாக்கும் கதிர் வீச்சு-ionizing radiation.