பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

அணுவின் ஆக்கம்



நமது உடலில் பல வேதியல் விளைவுகள் நிகழ்கின்றன. மிகச் சிறிய அளவிலுள்ள பல தனிமங்கள் பல முக்கிய விளைவுகளில் பங்கு கொள்ளுகின்றன. எடுத்துக்காட்டாகக் கரியைக் கூறலாம். நமது உடலில் கரி பல வேதியற் கிரியைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. உயிரணுக்களில் கரி இன்றியமையாத பொருளாகவுள்ளது. நமது உணவிலும், உடலிலிருந்து அகற்றப்பெறும் கழிவுப் பொருள்களிலும் கரி உள்ளது. ஆகையால், கரியைக் கதிரியக்கமுடையதாகச் செய்து அதை உடலில் செலுத்திப் பல உண்மைகளை அறியலாம். இன்சுலின் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். ஒருவர் உடலில் இன்சுலின் குறைவாகச் சுரந்தால் அவர் உடல் சருக்கரையைச் சரியாகப் பயன்படுத்த முடியாது. ஹார்வார்டு என்னும் இடத்திலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் கதிரியக்கமுள்ள கரியமிலவாயு மண்டலத்தில் மொச்சைச் செடியை வளர்த்துக் கதிரியக்கமுள்ள சருக்கரையைத் தயாரித்தனர். இந்தச் சருக்கரையை இன்சுலினுடன் சேர்த்து அவற்றை நீரிழிவு நோயால் பீடிக்கப்பெற்றிருக்கும் எலிகள் உடலில் செலுத்திப் பல உண்மைகளைக் கண்டறிந்தனர். இன்சுலின் கிளைகோஜன் உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது என்றும், சருக்கரையை எரிப்பதற்கும் அது பயன்படுகிறது என்பதையும் அறிந்தனர்.

இவ்வாறு நமது உடலில் நடைபெறும் பல நுட்பமான வேதியற் கிரியைகள் நுணுக்கமாக ஆராயப்பெறுகின்றன. இன்று அறிவியல் ஆராய்ச்சியில் வழங்கும் பல முக்கிய முறைகளில் வழி-துலக்கியறியும் முறையும் ஒன்றாகத் திகழ்கின்றது.