பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

அணுவின் ஆக்கம்


டாக்கவல்ல ஆற்றல்களை கட்டவிழ்த்துவிடச் செய்தலும் கூடும். இவை உயிருள்ள இழையங்களை[1]ப் பாதிக்கச்செய்யும். எனவே, சிந்தனையற்ற விடுப்பின்[2] காரணமாகவோ அல்லது ஆழ்ந்த சிந்தனையில் விளைந்த பொழுதுபோக்குச் செயலாகவோ[3] இப்பொருள்களின் பண்புகளை அறியும் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாகாது. அந்த ஆராய்ச்சி மிக அவசியமாக மேற்கொள்ள வேண்டிய தொன்று. இதில் மேம்போக்கான கவனத்துடனோ, அல்லது சிறிதும் கவனமற்றோ இருத்தல் ஆகாது. அறியாமையின் காரணமாகவோ அன்றி மேம்போக்காகக் கையாண்டதனாலோ புதிர்க் கதிர்களும் ரேடியமும் விளைவித்த சகிக்கமுடியாத அழற்புண்கள்[4] என்றும் பதிவேட்டில் மங்கலான எச்சரிக்கையாக[5] நின்று நிலவுகின்றன. அறிவியலாராய்ச்சி நாம் எண்ணிப் பார்க்கவும் இயலாத அளவு நன்மைகளை உண்டாக்கும் வாய்ப்புக்களைத் தரினும், அதே அளவு எதிர்பார்க்க முடியாத விபத்துக்களைத் தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கடமைகளையும் கொண்டுதானிருக்கின்றன. தீயினைக் கண்டறிந்த மனிதன் தொடக்கத்திலிருந்து இன்றுவரை அதனைப் பயனுள்ள முறையிலும் தீங்குகளை அகற்றக் கூடியவாறும் கையாளுவதற்கு நீண்டதொரு பயிற்சியினைப் பெற்று வருவது போலவே, அணுவாற்றலை மக்கள் நலனுக்காகக் கையாளும் பொழுதும் நெடுநாள் பயிற்சி பெற்றுதான் ஆக வேண்டும். இவ்வாறு பெறவேண்டிய பயிற்சிக்கு ஒரு முடிவும் இராது என்றுகூடச் சொல்லலாம். அதுவும் உயிரியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் அணுவாற்றலைக் கையாளுங்கால் மிகவும் விழிப்பாகவே இருத்தல் வேண்டும். இந்த இரண்டு துறைகளிலும் பெருநன்மைகள் உண்டாகும் வாய்ப்புக்களும் உண்டு ; உயிருக்கே ஊறு விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.


  1. 3. இழையங்கள் - tissues.
  2. 4. சிந்தனையற்ற விடுப்பு - idle curiosity.
  3. 5. ஆழ்ந்த சிந்தனையில் விளைந்த பொழுது போக்குச்செயல்-speculative diversion.
  4. 6. சகிக்க முடியாத அழற்புண்கள் - appalling burns.
  5. 7. மங்கலான எச்சரிக்கை - sombre warning.