பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருத்துவத்துறையில் அணு

213


இதனை முதலில் ஒண்டாரியோ[1] என்ற இடத்திலமைக்கப் பெற்றுள்ள மருத்துவ நிலையத்தில்[2] பயன்படுத்தினர். இது நன்மையையும் தீமையையும் விளக்கவல்லதாதலின் இதனைப் பயன்படுத்தின கனடா நாட்டு நிபுணர்கள்[3] மிகப் பாதுகாப்பான முறைகளே மேற்கொண்டனர். அவர்கள் மூன்றரை டன் எடையுள்ள எஃகாலான குழல் ஒன்றை அமைத்து அதன் உட்புறத்தில் ஈயத் தகட்டைப் போர்த்தினர். ஒரு அவுன்ஸ் கோபால்ட்டு-60ஐ அதனுள் வைத்து குண்டினைத் தயாரித்தனர் ! குழலின் ஒருபக்கத்தில் அமைக்கப்பெற்றிருந்த மிகச் சிறிய திறப்பு வழியாக கதிரியக்கம் வெளிப்பட்டு நோயாளியை அடைகின்றது. அத்திறப்பின்மீது அமைக்கப்பெற்றுள்ள மூடி தொலைவிடத்திலுள்ள மின்னியக்கப் பொறியால்[4] இயக்கப்பெறுகின்றது. இவ்வமைப்பு நோயாளிக்கும் மருத்துவருக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது. ஒரு அவுன்சு கோபால்ட்டு-60ன் விலை 17,500 டாலர். அதே அளவு ஆற்றல்வாய்ந்த கதிர்களைத் தரவல்ல ரேடியத்தின் விலை 50,000,000 டாலர். இன்று புற்றுநோயுள்ள இழையங்களில் கதிரியக்கத்தை ஏற்படுத்துவதற்குக் கதிரியக்கக் கோபால்ட்டு-நைலான் கயிறும் கண்டறியப் பெற்றிருக்கின்றது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மருத்துவர் சத்திர சிகிச்சைமூலம் அறுத்து நீக்கியபின், இத்தகைய நைலான் (nylon) நூல்களைக் கொண்டு இழையங்களைத் தைத்துவிடலாம். எஞ்சியுள்ள நோய்வாய்ப்பட்ட இழையங்களை இந்த நூலிலிருந்து வரும் கதிர்கள் அழித்துவிடும்.

கோபால்ட்டு-60ஐப் போலவே பயனளிக்கவல்லது மிக அண்மையில் கண்டறியப்பெற்ற செசியம்-137 என்பது. இது காமா-கதிர்களை வெளிவிடும் பக்குவிடும் பொருள் ; நீண்ட அரை-வாழ்வைக் கொண்டது. இதுவும் புற்று நோய்ச் சிகிச்சையில் பயன்படுகின்றது. இது ஒக் ரிட்ஜ்[5]


  1. 37. ஒண்டாரியோ-Ontario.
  2. 38. மருத்துவ நிலையம் - hospital,
  3. 39. நிபுணர்கள் - experts.
  4. 40. மின்னியக்கப்பொறி - electric motor.
  5. 41. ஓக் ரிட்ஜ் - Oak Ridge.