பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

அணுவின் ஆக்கம்


என்ற இடத்திலுள்ள அணுக்கரு ஆராய்ச்சி நிலையத்திலுள்ள[1] மருத்துவப் பகுதியைச் சார்ந்தவர்களால் பயன்படுத்தப் பெறுகின்றது.

இன்று கதிரியக்கப் பொன்னும்[2] புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப் பெறுகின்றது. உடலின் குழிகளிலுள்ள புற்றுநோய் இழையங்கள் அடிக்கடி அதிகமான பாய்மங்களை உற்பத்தி செய்கின்றன. இந்தக்குழிகளில் கதிரியக்கப் பொன்னைக் குத்திப் புகுத்திவிட்டால் அது புற்றுநோய் அணுக்கள் வளராதிருக்கத் தடைசெய்கிறது ; அன்றியும், குழியின் அணைச்சவ்விலுள்ள உயிரணுக்களின் சுரக்கும் செயலையும் குறைத்துவிடுகின்றது. உடலில் மிக ஆழத்தில் வளரும் கழலையைக் குணப்படுத்தக் கதிரியக்கப் பொன் பயன்படுத்தப் பெறுகின்றது.

தொண்டைக் கழலை நோய்[3]  : நமது உடலின் பல பகுதிகளில் தூம்பிலாச் சுரப்பிகள்[4] உள்ளன. இவற்றில் ஊறும் ஹார்மோன்கள்[5] என்ற வேதியற் சாறுகள் நமது உடலில் நிகழும் பலவித உயிரியல் விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. நமது கண்டத்திலுள்ள சுரப்பியின் பெயர் தைராய்டு[6] என்பது. இதனைப் புரிசைச் சுரப்பி என்று வழங்குவர். இது செயற்படுவதில் கோளாறு நிகழ்ந்தால் உடல்நலம் பல்வேறு விதங்களில் கெடும். இதில் அயோடின்[7] என்ற வேதியற்பொருள் அதிகம் உள்ளது. இச்சுரப்பியில் நேரிடும் கோளாற்றினைப் போக்க கதிரியக்க அயோடின் பயன்படுகின்றது. ஒருவருடைய புரிசைச் சுரப்பி மிகவும் சீர் கேடான நிலைக்கு உள்ளாகி இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு அயோடின்-131 தரப்பெறுகின்றது ; அது ஊசிமூலம் உடலினுள் புகுத்தப்பெறுகின்றது. உள்ளே சென்ற அயோடின் ஒரிடத்தான்கள் காக்கைக்கூட்டில் வாழும் குயில் குஞ்சுகளைப்போல் புரிசைச்சுரப்பியில்


  1. 42 அணுக்கரு ஆராய்ச்சி நிலையம் - Institute of Nuclear Studies.
  2. 43. கதிரியக்கப் பொன் -radiogold.
  3. 44. கழலைநோய் - goitre
  4. 45. தூம்பிலாச் சுரப்பிகள் -ductless glands
  5. 46. ஹார்மோன்கள்-hormones.
  6. 47. தைராய்டு - thyroid.
  7. 48. அயோடின் - iodine.