பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவுத்தொழிலும் அணுவும்

239


ளிச் சேர்க்கையால்தான் பல்வேறு ஆற்றல் பொருள்கள் தோன்றுகின்றன என்பதையும் அறிகின்றோம். கதிரவன் - தான் இவ்வுலக வாழ்க்கைக்கு உயிர்நாடியாக அமைகின்றான். இந்த அறிவியல் உண்மையினை அனுபவ இயலாகக் கண்ட இளங்கோ அடிகள் என்ற கவிஞர் பெருமான்,

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.[1]

என்று தான் இயற்றிய காவியத்தில் மங்கல வாழ்த்துப் பாடலாக வெளியிட்டார். 'கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பில்' ஊறித் திளைத்த நக்கீரர் பெருமானும்,

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு '[2]

என்று தம் திருமுருகாற்றுப் படையைத் தொடங்குகிறார். 'உலகத்திலுள்ள பல்லுயிர்களும் மகிழ, யாவர்க்கும் நேராகச் சுழலும் தனது ஒளியால் காட்சியின் பயன் கொள்வார் பலரும் புகழும் ஞாயிறு' என்பது இதன் பொருள். 'உலகம்' என்பது சிவான்மாக்களே உணர்த்துகிறது ; 'பலர்' என்பது எல்லாச் சமயத்தினரையும் குறிக்கின்றது. ஆற்றலின் மூலமாக-ஆதிமூலமாக-விளங்கும் கதிரவனே பொங்கல் விழாவின் கடவுளாக-உழவர்கள் உவந்து போற்றும் தலைவனாக-விளங்குகிறான். ஒவ்வோர் ஆண்டிலும் உழவின் பயனாகப் புதிதாகப் பெற்ற பொருள்களை ஆண்டவன் திருவடியில் காணிக்கையாக வைத்துத் தம் நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் உழவர்கள்; பொங்கல் விழாவினப் பூரிப்புடன் கொண்டாடுகின்றனர். இயற்கை வாழ்வில் தோய்ந்த தமிழர்களின் பொங்கல் விழா அறிவியல் உண்மைகள் அடங்கிய ஒரு பெருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

கதிரவன் காய்தலால் கால்தெறிக்க தலைசுட நடக்கும் தமிழர்களுக்கு வெய்யோனின் நினைவுதான் உடனே எழும்.


  1. 25 சிலப்பதிகாரம்-மங்கல வாழ்த்துப் பாடல் வரி (4-6)
  2. 26திருமுரு - வரி (1-2).