பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவுத்தொழிலும் அணுவும்

241


கொள்ளவும் இயலும். அதிகம் முடியாவிட்டாலும், ஒளிச் சேர்க்கையில் நடைபெறும் எதிர்வினையை[1]இரட்டிப்பாக்கி கதிரவன் ஒளியிலிருந்து பச்சிலைகள் தடையின்றி உணவினை உற்பத்தி செய்ய இயலும். பச்சிலைகள் வெய்யோனிடமிருந்து பெறும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன ; ஆனால், அவை மிகத் திறமையாகப் பயன்படுத்துவதில்லை. நெல் வயலிலும் புல்வெளிகளிலும் காலும் கதிரவன் ஆற்றலில் ஒரு சதவிகிதத்திற்குக் குறைவாகவே உணவு உற்பத்தியில் பயன்படுத்தப் பெறுகின்றது. இதை அபிவிருத்தி செய்வதற்கு இடம் இருக்கின்றது. நண்பகலில் தாவரங்கள் உறங்கத் தொடங்குகின்றன. இந்த வேளையில் தான் நல்ல சூரிய ஒளி இருக்கிறது. இப்பொழுது தாவரங்கள் உறங்காமல் உணவு தயாரிக்கச் செய்யக் கூடுமானால், நம் உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கக் கூடும். இதைச் செய்வதற்குக் கதிரியக்க ஓரிடத்தான்கள் நமக்குப் பெரிதும் பயன்படக்கூடும்; எதிர்காலத்தில், வரும் நூற்றாண்டுகளில், மக்கள் பெருக்கத்திற்கேற்ப இவ்வாராய்ச்சி மிகவும் இன்றியமையாத செயலாகவும் மாறலாம்.

எனவே, மிகவும் அவசரமாக இராவிட்டாலும் ஒளிச் சேர்க்கைப் பற்றிய ஆராய்ச்சியை வழி-துலக்கி முறையை[2] மேற்கொண்டு தொடங்குவது மிகவும் அவசியமாகிறது. இன்று இவ்வாராய்ச்சி பல நாடுகளில் பல ஆராய்ச்சி நிலையங்களில் நடைபெற்று வருகின்றது. ஒளிச் சேர்க்கையின் இரகசியங்களையறிவதில் ஆய்வாளர்கள் துடித்து நிற்கின்றனர். அந்த இரகசியங்களை அறிந்து ஒளிச் சேர்க்கையை விரைவாக நடைபெறவோ புதிய சத்துள்ள பொருள்களை உண்டாக்கவோ மனிதன் கற்றுக்கொண்டு விட்டால், உலகில் என்றுமே உணவு நெருக்கடி நேரிடாது செய்து விடலாம்.

அணு உலையிலிருந்து கதிரியக்கக் கார்பனை உண்டாக்குதல் எளிது. இதிலிருந்து கதிரியக்கக் கரியமில வாயுவை


  1. 27 எதிர்வினை - reaction
  2. 28வழி-துலக்கி முறை - tracer method
53-17