பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

அணுவின் ஆக்கம்


அளித்தனர். அது செழிப்பாகவும் முறையாகவும் வளர்ந்து நன்றாகக் காய்த்துப் பழுத்தன. மூன்றாம் செடிக்கு மிதமிஞ்சிய துத்தநாகந்தை அளித்தனர். அச்செடி முதல் செடியை விடக்கூட நன்றாக வளரவில்லை. (படம்-41). எனவே, துத்த நாகம் குறைந்தாலும், அளவில் அதிகப்பட்டாலும் அது தக்காளிச் செடியின் வளர்ச்சியைக் குன்றச் செய்கிறது என்பதனை அறிகின்றோம். ஆராய்ச்சி மூலம் செடிகளுக்கு வேண்டிய துத்தநாக அளவினையும் நிர்ணயித்தனர், இச் செய்தியை மேலும் ஆராய்ந்த பொழுது வேறோர் உண்மையும் தெரிய வந்தது. செடிகள் வளர்வதற்கும், காய்த்துப் பழுப்பதற்கும் சிற்சில இலவலேசத் தனிமங்கள் தேவையில்லை என்பது தான் அது. எனினும், நாம் இத் தாவரங்களே உண்ண நேரிடுங்கால் நம்முடைய உடல் ஊட்டத்தின் பொருட்டு இவற்றில் சில குறிப்பிட்ட தனிமங்கள் இருப்பது இன்றியமையாதது. காய்கறிச் செடிகளுக்கு அயோடின் என்ற தனிமம் தேவையில்லை என்பது ஆராய்ந்து கண்ட உண்மைதான். ஆயினும், நம்முடைய புரிசைச் சுரப்பிக்காக நமக்கு அயோடின் அவசியம் வேண்டும். அதனை நாம் காய்கறிகளிலிருந்தும் நீரிலிருந்தும் உப்பிலிருந்தும் பெறுகின்றோம். மண்ணிலும் நீரிலும் அயோடின் இல்லாமலிருக்கும் பகுதிகளிலுள்ள மக்கள் தொண்டைப்புறக் கழலை நோய்களினல் பாதிக்கப் பெறுகின்றனர் என்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இலவலேசத் தனிமங்களின் செயலை ஆராய்வதற்குப் பற்பல வகையான தாவரங்களைப் பயன்படுத்தலாம். இத் தாவரங்களில் எவ்விதமான எதிர்வினைகள் நடைபெறுகின்றன என்பதைக் குறைந்த கால அளவில் தீர்மானித்து விடலாம். இங்ங்ணம் கண்டறியப் பெற்ற செய்திகளை ஏற்றவாறு மனிதப் பிறவிகளிடமும் உபயோகப்படுத்திப் பார்க்கலாம். இதனால் நற்பயன் கிட்ட வாய்ப்பு உண்டு. இத் துறையில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை முடிவுற்ற பிறகுதான் இலவலேசத் தனிமங்களின் முழுச் செல்வாக்கையும் நாம் அறிந்து கொள்ள இயலும்.