பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்துறையில் அணு

263


 லாம். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இக் கருவிக்கும் அளவிடப்பெறும் பொருளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதனால் உருண்டு செல்லும் தகட்டை நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை ; வெட்டவேண்டிய அவசியமும் இல்லை. தகடும் கிழிந்து போவதில்லை.

வேறு அளவு கருவிகள் : கனத்தை அளக்கும் கருவிகளைப் போலவே வேறு அளவு கருவிகளும் கதிர்க் கற்றையின் தீவிரத்தின் மாற்றங்களையே அளவுகளாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக கதிரியக்கக் கோபால்ட்டிலிருந்து வெளி வரும் காமா-கதிர்வீச்சினைக் கொண்டு ஒர் உலையிலுள்ள உருகிய உலோகத்தின் உயரத்தையோ, கனபரிமாணத்தையோ அளக்கலாம். மலைச் சிகரங்களில் குவிந்திருக்கும். பனிக் கட்டியிலுள்ள நீரின் அளவையும் அளந்து காண முடியும். கதிரியக்க மூலத்தை ஒருபுறமும் அளக்கும் கருவியை மற்றொரு புறமும் வைத்து இது அளவிடப்பெறுகின்றது. இதே முறையை மேற்கொண்டே அதிக அமுக்கம், அதிக சூட்டு நிலையிலுள்ள பொருளின் செறிவும் உயரமும் கணக்கிடப் பெறுகின்றன.

சில உற்பத்தித் தொழிற்சாலைகளில் பொருள்களைப் பொட்டணங்களிலும் டப்பாக்களிலும் அடைக்கும் செயலில் மேற்படிப் பொட்டணங்களைச் சோதிப்பதற்குக் கதிரியக்க ஓரிடத்தான்கள் பயன்படுகின்றன. பொருள் நிரம்பிய பொட்டணங்கள் அல்லது டப்பாக்கள் இயந்திர விசையால் நிரப்பப் பெற்று ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டேயிருக்கும். ஒரு பொட்டணத்தில் சரியானபடி பொருள் நிரம்பாதிருந்தால் அதன் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திலுள்ள எண்-கருவிக்கு அதிகக் கதிர்கள் செல்லும். உடனே ஒர் எச்சரிக்கை ஒளி ஒளிரும் ; அல்லது சில இயந்திரப் பகுதிகள் இயங்கி குறைபாடுள்ள பொட்டணத்தைக் கீழே தள்ளிவிடும்.