பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்து

305


லும் அறிஞர்களிடையே ஆராய்ச்சியை வளர்ப்பதுவும் இதன் பொறுப்பாகும்.

உலக சுகாதாரக் கழகம் : அணுவாற்றலிலிருந்து பெறும் மின்னாற்றலைப் பயன்படுத்துவதில் இக்கழகம் நேரடித் தொடர்பு கொள்ளாவிடினும், கதிர் வீச்சுக்களையும் கதிரியக்க ஓரிடத்தான்களையும் பயன்படுத்துவதில் நேரடித் தொடர்பு கொண்டுள்ளது ; அதுவும் தனிப்பட்ட முறையில் சில நாடுகள் அவற்றைக் கையாள இயலாத நிலையில் அதிக அக்கறை எடுத்து அந்நாடுகளுக்குத் துணையாக இருக்கின்றது. இன்று இக்கழகம் அணுவாற்றல் வளர்ச்சியில் இரண்டு திட்டங்களில் பங்கு கொண்டுள்ளது.

முதலாவது, மக்கள் சுகாதாரத்தைக் காப்பது. அணு உலகளிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களால் பலவித தீங்குகள் நேரிடுகின்றன. திரவக் கழிவுகள் நீரைப் பாதிக்கின்றன; ஆவியாகச் செல்லும் கழிவுகள் காற்றை நஞ்சாக்குகின்றன ; திடக் கழிவுகள் நிலத்தையும் கடலையும் கெடுத்து விடுகின்றன. இத்துடன் கதிரியக்கப் பொருள்களுக்குச் சரியான அளவுகளை நிர்ணயித்தலும், ஆபத்துக்களை விளைவிக்கும் கதிர்வீச்சுக்களின் திருத்தமாக அளவுகளை நிர்ணயிப்பதும் இக்கழகத்தின் பொறுப்புக்களாகவுள்ளன. இந்த அம்சங்களில் கழகம் சிறந்த ஆலோசனை நல்குவதுடன் இந்த அம்சங்கள் பற்றிய அறிவியல் தகவல்களைத் திரட்டி அவற்றைப் பரப்பியும் வருகின்றது.

இரண்டாவது, கதிரியக்க ஓரிடத்தான்களை மருத்துவம், நோய்களைப் பரிசீலனை செய்தல், மருத்துவ ஆராய்ச்சி ஆகிய துறைகளில் பயன்படுத்துவது. இம் முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குச் சுகாதாரக் கழகம் சிறந்த சாதனமாக அமைந்துள்ளது. அன்றியும், பணவுதவியுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு வசதிகளாலும், ஆலோசனை கூறுவதாலும், ஆராய்ச்சிச் சுற்றுலாக்களாலும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளித்தும், உயர்ந்த பயிற்சிப் படிப்புக்களை நல்கியும் சேவை செய்து வருகின்றது.

53ー21