பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணுவின் அமைப்பு

17


 சோடியம் 10 என்ற பொருள் 26 பங்கு ; இது சோற்றுப்பில் காணப்படும் பொருளாகும். பொட்டாசியம்11 24 பங்கு ; இது அபிரேகம்12 முதலியவற்றில் உள்ளது. மக்னீசியம்13 19 பங்கு ; இது கடல் நீரிலும் உண்டு. பெட்ரோமாக்ஸ் விளக்கில் திரியாக எரிவதற்கு வெள்ளைச் சல்லடைபோல் உறையாகப் போடப்பட்டிருப்பது இப் பொருளே. நீரியம் 9 பங்கு இது நீரில் உள்ளது ; இது மண்ணிலும் மணலிலும் காணக் கிடக்கின்றது. குளோரின்14 என்பது 2 பங்கு ; இது சோற்றுப்பில் சோடியத்துடன் சேர்ந்து சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின்றது. பாஸ்வரம்14 1 பங்கு. இது எருவிற்கு இன்றியமையாத பொருள். இந்தப் பன்னிரண்டு பொருள்களே உலகில் 991 பங்கானால், மிகுந்து நிற்கும் 80 அடிப்பொருள்களும் 9 பங்கு அளவே இருக்கக் காண்கின்றோம்.

பெயரிடும் முறை : இவ்வுலகிலுள்ள மக்கள் பலர் என்றாலும், அவர்களைப் பலவிதமாகப் பெயரிட்டு வழங்குகின்றோம். செட்டிநாட்டில் முதல் எழுத்துக்களைக்கொண்டு வழங்கும் முறை பெருவழக்காக இருக்கின்றது. முத்தையனை மு. (மூனா) என்றும், தியாகராசனைத் தி (தீனா) என்றும், சொக்கலிங்கத்தைச் சொ (சோன) என்றும் வழங்குவதைக் காணலாம். அதே முதல் எழுத்தில் இரண்டு மூன்று பெயர்கள் தொடங்கினால் அவற்றை வேறுபடுத்தி அறிவதற்கு முதல் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவர். முருகப்பனை 'முரு' (மூனா ரூனா) என்றும், திருநாவுக்கரசைத் திரு (தீனா ரூனா) என்றும், வழங்குகின்றனர். அழகப்பன், அருணசலம், சிதம்பரம் ஆகிய பெயர்கள் முறையே அழ’ (ஆனா ழானா) என்றும், அரு. (ஆனா ரூனா) என்றும், சித’ (சீனா தானா) என்றும் வழங்கப் பெறுகின்றன. இது போன்ற ஒரு முறைதான் அணுக்களுக்குப் பெயரிடுவதிலும் மேற்கொள்ளப் பெற்றிருக்கின்றது.


10 சோடியம் - sodium. 11 பொட்டாசியம் - potassium 12 அபிரேகம் - mica. 13 மக்னீசியம் - magnesium. 14 குளோரின் - chlorine. 15 பாஸ்வரம் - phosphorus

53–3