பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அமைப்பு

37


இணையுங்கால் எவ்வளவு பொருண்மை குறைகின்றதோ அதற்கேற்ற அளவில் ஆற்றலைப் பயன்படுத்தினாலன்றி உட்கருவினைத் தகர்க்க முடியாது.

ஆல்பா-துணுக்கு என்பது அணு-எண் 2 கொண்ட பரிதியத்தின்" உட்கருவாகும். இரண்டு நேர் இயல் மின்னிகளும் இரண்டு பொது இயல் மின்னிகளும் இணைந்ததால் உண்டானது இது. இவற்றின் பொருண்மையைக் கூட்டினால் மொத்தம் 4:0842 ஆகும். ஆனல், ஆல்பா-துணுக்கின் பொருண்மை 4.0017 தான். ஆற்றலாக உருமாறிய 0.0315 பொருண்மை எங்கோ மறைந்தது. இதற்கு ஈடான ஆற்றலின் அளவு 28,000,000 எலக்ட்ரான்-வோல்ட்டு. இந்த அளவு ஆற்றலைப் பயன்படுத்தினாலன்றி அதன் உட் கருவைத் தகர்க்க முடியாது. ஆதலால்தான், ஆல்பா-துணுக்கு அவ்வளவு நிலைத்த தன்மையைப் பெற்றுள்ளது. கதிரியக்கமுள்ள பொருளின் உட்கரு வெடிக்கும் பொழுது கூட ஆல்பா-துணுக்கு தகர்ந்து போவதில்லை; முழு ஆல்பா- துணுக்காகவே வெளிவருகின்றது.

மாயமாக மறைந்த ஆற்றல் : இருநிக் கரு அமைப்பிலும் பரிதியக் கரு அமைப்பிலும் ஆற்றல் மறைந்ததைக் கண்டோமன்ரறோ ? இந்த ஆற்றல் மறைவதற்குக் காரணம் என்ன ? ஓடிப் போகும் சிறுவனை ஓடாது தடுத்துப் பிடித்துக் கொள்வதற்கு ஆற்றல் வேண்டுமல்லவா? ஒரேவித நேர்மின்னூட்ட முள்ள துணுக்குகள் ஒன்றையொன்று வெறுத்துத் தள்ளும், என்பது நமக்குத் தெரியும். அணுவின் உட்கருவில் நேர் மின்னூட்டம் பெற்ற நேர் இயல் மின்னிகள் இருக்கின்றன. இவை ஒன்றையொன்று வெறுத்துத் தள்ளி பிய்த்துக் கொண்டு போகாமல் ஒன்றாக இணைய வைத்துத் திரட்ட ஆற்றல் வேண்டும். மறைந்த ஆற்றல் இதற்குச் செலவிடப் பெற்றிருக்கின்றது. இது நேர் இயல் மின்னிகளை அழுத்தி வைத்துக் கொண்டு கிடக்கின்றது.

"பரிதியம் –helium