பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆற்றல்

47


ஒவ்வொரு விநாடியிலும் கதிரவனிடமிருந்து ஒன்றரைக் கோடியே கோடி குதிரைத் திறன் அளவு கொண்ட ஆற்றலைச் சூரியனிடமிருந்து பூமி பெறுகிறதாக அறிவியலறிஞர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதி கடல், ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து நீரை ஆவியாக மாற்றுவதற்குச் செலவழிக்கப்பெறுகின்றது. இவ்வாறு மேலே நீராவியாகச் செல்லும் நீர்தான் பின்னர் மலைகளின் உச்சியில் மழையாகப் பொழிகின்றது. மழை நீர் ஆறுகளாகப் பாய்வதனால் நீர் வீழ்ச்சிகள் உண்டாகின்றன. உலகிலுள்ள எல்லா ஆறுகளிலும் ஓடுகின்ற நீரின் ஆற்றலைக் கொண்டு சுமார் முப்பத்தைந்து கோடி குதிரைத் திறன் அளவு ஆற்றலைப் பெறலாம் என்று மதிப்பிடுகின்றனர். கதிரவன் வெப்பத்தையொட்டியே காற்றுகள் வீசுகின்றன ; காற்றின் ஆற்றல் குறைந்த அளவு பயன்படுகின்றது. மின்னலில் உண்டாகும் மின்சார ஆற்றலைக் கட்டுப்படுத்த இன்னும் அறிவியலறிஞர்கள் வழி வகுக்கவில்லை. ஒவ்வொரு மின்னலிலும் சுமார் ஆயிரம் குதிரைத் திறன் அளவு ஆற்றல் வெளிப்படுவதாகவும், உலகின் பல பாகங்களில் விநாடி ஒன்றுக்குச் சராசரி பதினாறு மின்னல்கள் ஏற்பட்டு வருவதாகவும் மதிப்பிடப் பெற்றிருக்கின்றது. ஆனால், தற்சமயம் மின்சார ஆற்றலே நீர்வீழ்ச்சிகளினின்றும், நிலக்கரியினின்றுமே பெறுகின்றனர். இன்று அணுவில் பதுங்கிக் கிடக்கும் ஆற்றலைக் கிளப்பிவிட்டு அதனே மின்னாற்றலாக மாற்றும் வழியையும் கண்டறிந்திருக்கின்றனர். இதனைப் பின்னர்க் காண்போம்.

கதிரவனிடமிருந்து பெறும் ஆற்றலைத் துணைகொண்டே தாவரங்கள் வேதியற் கிரியைகளை விளைவித்து 'சருக்கரை' மாப்பொருள்கள்' மரக்கூர்' ஆகியவற்றைத் தயாரிக்கின்றன. இதன் விவரம் பின்னர் விளக்கப்பெறும். மனித நலனுக்காகத் தாவரங்கள் ஆண்டுதோறும் பத்தாயிரம் மிலியன் டன் மரத்தையும் (இது முழுவதும் மரக்கூரா லானது) பல நூறு மிலியன் டன்கள் கோதுமை, அரிசி,


23 சருக்கரை - sugar. 24 மாப்பொருள் – starch. 25 மரக் கூர் – cellulose.