பக்கம்:அண்ணா நாற்பது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பல்வளமும் தமிழ்க்கலைகள் பற்பலவும் தளிர்க்கச் செய்தாய்
தமிழகத்தின் பெருமையெலாம் தரையெங்கும் கால்கொண்டு தழைக்கச் செய்தாய்.


20. சாதி சமயச் சாத்திரக் குப்பைகளைச் சாடித் தீர்த்தாய்
நீதி வழுவா நெறிமுறைக் கோட்பாடு நிலவச் செய்தாய்
ஓதி யறிந்தே உயர்ந்த பகுத்தறிவை உணரச் செய்தாய்
கோதில் புரட்சி குன்றா மறுமலர்ச்சிக் கொள்கை கண்டாய்.


21. கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போய்விடவே கழகம்பல கண்டனை
புண்மூடி வையாமல் புரையோடச் செய்யாமல் புன்மைகளைக் கீறினாய்
தண்மையுறு வழியினிலே தகுபுரட்சி பலசெய்து தமிழர்தம் நெஞ்சிலே
வண்மைதரு நற்கருத்து வளங்கொழிக்க வைத்தனையே வணங்குகிறோம் அண்ணலே!


22. சிரிக்க மட்டிலுமே சிலர்பேசுவர் சிந்திக்கச் சிலர்பேசுவர்
சிரிக்க ஒருகாலும் சிந்திக்க ஒருகாலும் சிலர்பேசுவர்
சிரிக்கவும் அதேநேரம் சிந்திக்கவும் நின்பேச்சு செய்திடுமே
சிரிக்கவும் ஆழ்ந்தாழ்ந்து சிந்திக்கவும் எம்மண்ணா செய்வதென்றோ?


23. அண்ணாசொற் பொழிவென்றால் அலைகடலும் ஒய்ந்துவிடும்
அண்ணாவின் பேச்சென்றால் அழுதபிள்ளை வாய்சிரிக்கும்
அண்ணாசொல் லாற்றுங்கால் ஊசிவிழும் ஒலிகேட்கும்
அண்ணாவின் சொற்கேட்டே அயலாரும் வாய்பிளப்பர்.

9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_நாற்பது.pdf/11&oldid=1030968" இலிருந்து மீள்விக்கப்பட்டது