பக்கம்:அண்ணா நாற்பது.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29. அஞ்செழுத்து மந்திரமும் ஆறெழுத்து மந்திரமும் அதன்மேல் எட்டாய்
விஞ்செழுத்து மந்திரமும் விரித்தொலிப்பார் தம்மைவிட ‘அண்ணா’ வென்றே
கொஞ்சியெழும் மூன்றெழுத்தாய்க் குலவிடுநன் மந்திரத்தைக் கூறு வோரே
மிஞ்சிடுவர் இந்நாட்டில் மிகையல்ல இக்கூற்று மிக்க உண்மை!


30. ஒருகுடும்பில் ஓரொருவர் ஒருசிலர்க்கே அண்ணாவாய் உறைவ துண்டால்
ஒருகுடும்பத் தண்ணாவும் உடன்பிறந்தா ருடன்பகைதான் உற்றுச் செற்றுத்
தெருவரைக்கும் வந்துதலை தெறிக்கப்போர் செய்வதுண்டு தேரின் நீயே
ஒருநாட்டின் அண்ணாவாய் உளங்கலந்த அண்ணாவாய் உற்ற தெங்ஙன்?


31. ஒருநல்ல உருவுடனே ஒரேஓர் அண்ணாவாய் உதித்தது போதாதுகாண்
ஒருகோடி உருவுடனே ஒருகோடி யண்ணாவாய் உதித்துமே நீயிருந்தால்
ஒருகோடி தம்பியரும் ஒருவர்க்கோர் அண்ணாவை உடன்கொண்டு சென்றிருப்பர்
ஒருஞாயி றேபோல ஒரேஓர் அண்ணாவாய் உதித்தனை என்செய்குவோம்!


32. அண்ணாவும் இறக்க வில்லை அண்ணாவைத் துறக்க வில்லை
அண்ணாவை மறைக்க வில்லை அண்ணாவை மறக்க வில்லை
அண்ணாவை இழக்க வில்லை அனல்மூட்டி அழிக்கவில்லை
அண்ணாதான் கடலோ ரத்தில் அமைதியுடன் இருக்கின் றாரே!

11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_நாற்பது.pdf/13&oldid=1030970" இலிருந்து மீள்விக்கப்பட்டது