பக்கம்:அத்தை மகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


கண்டிருக்கலாம். அவள் வாழ்க்கை இப்படி வீணாகுதே என்று தாய் பெருமூச் செறிவாள்.

தன் பருவமெல்லாம் பாழாகுதே என மகள் நெடுமூச்செறிவதும் அதிகமாயிற்று. வளரும் கொடி பற்றுக் கோல் நாடி மென்கரம் பரப்பி அசைந்து அசைந்து அகப்பட்டதைப் பிடித்துக்கொள்வதுபோல், அவளும்-- தனியாகத் துவண்டு வாடும் கன்னி---தன் உணர்ச்சியின் துண்டுதலின் படி நடக்கத் துணிந்தாள். -

ஆகவே, ஒரு நாள் அவளைக் காணமுடியாமல் போயிற்று. அதே தினத்தன்று அடுத்த வீட்டுப் பெரிய பிள்ளைவாள் மகனையும் காணோம் !

அவனுக்கு வயது முப்பதிருக்கும். கல்யாணமாகி மனைவி செத்து, மறு விவாகம் செய்து கொள்ளாமல் தறுதலையாகத் திரிந்தவன் அவன். அவன் பார்வை, கணவனுக்கும் கல்யாணத்துக்கும் காத்திருந்த பாவை மீது பாய்ந்தது. பசியால் புரண்ட அவள் பார்வை அவன் கண்களைக் கவ்வியது.

பார்வைப் பரிவர்த்தனை பிறந்தது. வளர்ந்தது. செழித்தது. சிரிப்பு விளைந்தது. பேச்சு மலர இடமளித்தது. உறவு பூத்தது. மறைவில் வளர்ந்தது. இப்படி எவ்வளவு காலமோ ! -

அது அவள் தாய்க்குக்கூடத் தெரியாது. திடீரென்று ஒருநாள் காலையில் மகளைக் காணோம்; வாசல் கதவு திறந்து கிடக்கிறது என்றதும் தான் 'திக்’ கென்றது. -

சில தினங்களாக அவள் மகளை அதிகம் கண்டித்து வந்தாள். காரணம், 'ஜாடைமாடையாக' உணர ஆரம்பித்திருந்தாள் மகளின் மாற்றத்தை. சதா அடுத்த வீட்டு மாடி ஜன்னலை நோக்கி அவள் தவம் கிடப்பதும், அங்கே 'அந்தத்தடியன் முழிச்சுக்கிட்டும் இளிச்சுக்கிட்டு நிற்பதும் நல்லதுக்கில்லே' என்று பட்டது அவளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/31&oldid=982001" இலிருந்து மீள்விக்கப்பட்டது