பக்கம்:அனிச்ச மலர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அனிச்ச மலர்

 னார்கள் அவர்கள். வேறு யாரும் வரவில்லை. மேரி, தயாரிப்பாளர் கன்னையா, சுமதி மூவரும் மட்டுமே போயிருந்தனர். சுமதிக்காக அரை டஜன் பட்டுப் புடவைகள் வேறுவேறு நிறங்களில் வேறுவேறு டிசைன்களில் எடுத்தார் தயாரிப்பாளர்.

கடையில் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது ஒர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. இவர்கள் வெளியே வருகிற நேரத்துக்கு வார்டன் மாலதி சந்திரசேகரன் புடவை வாங்குவதற்காகவோ, என்னவோ அதே கடைக்குள் நுழைந்தாள். சுமதி அவளைப் பார்த்தது போலவே அவளும் சுமதியை பார்த்துவிட்டாள். ஆனால் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாதது மட்டுமில்லை. முகமலர்ச்சி கூடப் பரஸ்பரம் காட்டிக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் சில சினிமாப் பத்திரிகைகளில் அவள் பயந்தது போலவே படங்களும், செய்தியும் பிரசுரமாகிவிட்டன.

'தயாரிப்பாளர் கன்னையா கண்டுபிடித்த புதுமுகம்’ என்ற தலைப்பில் முந்திய வெளிப்புறக் காட்சியில் எடுக்கப்பட்ட ’ஸ்டில்ஸ்’ எல்லாம் மாற்றி மாற்றி ஒவ்வொரு பத்திரிகையிலும் பிரசுரமாகிவிடவே, எதையும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது என்பது சுமதிக்குப் புரிந்துவிட்டது. அவள் பயந்த மாதிரியே அரை நிர்வாண, முக்கால் நிர்வாணப் படங்களே கூடச் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிவிட்டன. பத்திரிகைக்காரர்களுக்கு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்பதைப்பற்றி என்ன கவலை? உடனே இல்லாவிட்டாலும் நாளடைவில் ஊரில் அம்மாவின் கவனத்திற்கும் இங்கே வார்டனின் கவனத்திற்கும் அவை தப்பமாட்டா என்பது அவளுக்குப் புரிந்தது.

காஷ்மீர் போவதற்காக டெல்லிக்கு விமானம் ஏறிய தினத்தன்று இந்தப் பயமே அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முதலில் வரவில்லை என்ற சொல்லிக் கொண்டிருந்த மேரியும் அவர்களோடு புறப்பட்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/108&oldid=1132114" இலிருந்து மீள்விக்கப்பட்டது