பக்கம்:அனிச்ச மலர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

9


பிரபல நடிகர் பேசிய பேச்சு வேறு 'நடிகர் பாராட்டிய மாணவி' என்ற தலைப்பில் ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் துணுக்காக அவள் படத்துடன் அச்சாகிவிட்டது. அதனால் அவள் மகிழ்ச்சி பல மடங்காகி இருந்தது. கர்வத்தைக் கூடச் சுமதி புது மாதிரியாகக் கொண்டாடினாள். பலர், கர்வம் வந்தால் அடக்கத்தையே இழந்து விடுவார்கள். அவளோ கர்வத்தினால் தன்னிடம் புதுப் புது அடக்கங்களை வளர்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வோர் அடக்கமும் அவளை உள்ளூர அடங்காப் பிடாரி ஆக்கிக் கொண்டிருந்தன. ஒவ்வோர் பணிவும் அவள் மனத்தைப் பணியவிடாமல் செய்து கொண்டிருந்தன. எல்லாரைக் காட்டிலும் எல்லா விதங்களிலும் தன்னை உயர்ந்தவளாகப் பாவித்துக் கொள்ளத் தொடங்கினாள் அவள். அதை அடிப்படையாக வைத்தே அவளுடைய கற்பனைகள் வளர்ந்திருந்தன. கனவுகள் பெருகித் தொடர்ந்து கொண்டிருந்தன.

தன்னையும் தன் அழகையும் விடுதிநாள் விழாவில் பாராட்டிப் பேசிய அந்தப் பிரபல நடிகருக்கு ஃபோன் செய்து பேசுவதற்குக்கூட இரண்டொரு தடவை அவள் முயன்று, அது முடியாமல் போயிருக்கிறது. அப்புறம் நேரிலேயே தேடிப் போயும் அது அவள் நினைத்தபடி நடக்கவில்லை.

“எப்படியாவது எதிலாவது எனக்கு நடிப்பதற்கு ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்கள்” என்று அந்த நடிகரிடம் கேட்பதற்காகத்தான் கூச்சத்தையும் பயத்தையும் விட்டு விட்டு அவள் அந்த நடிகரைத் தேடி நேரில் போனாள். ஆனால் அவரைச் சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. சில சினிமாப் பத்திரிகைகளில் ‘எப்படி நடித்து முன்னுக்கு வந்தேன்?' என்ற தலைப்பின் கீழ்ப் பெரிய நடிகைகள் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்திருந்தாள். அதில் அவர்கள் முன்னுக்கு வர எப்படி எப்படி சிரமப்பட வேண்டியிருந்தது, எதை எதை இழக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/11&oldid=1146826" இலிருந்து மீள்விக்கப்பட்டது