பக்கம்:அனிச்ச மலர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அனிச்ச மலர்

 அந்த யூனிட்டைச் சேர்ந்த பலர் சுமதியையும், மேரியையும் பார்க்கும் போதெல்லாம் நமுட்டு விஷமமாகச் சிரித்துக் கொள்ளுவதும் தங்களுக்குள் 'குசுகுசு' வென்று காதைக் கடிப்பதுபோல் இரகசியம் பேசிக் கொள்ளுவதும் வழக்கமாயிருந்தன. ஆனால் பணம் வரவு செலவுக்காக உடன் வந்திருந்த 'புரொடக்க்ஷன் இன் சார்ஜ்' ஆள் மட்டும் சுமதி.மேரி விஷயத்தில் மிகவும் தாராளமாகவே நடந்து கொண்டார். அவர்கள் கேட்டது எதையும் அவர் மறுக்காமல் வாங்கிக் கொடுத்தார். அடிக்கடி அறையைத் தேடி வந்து "கூச்சப்படாமல் உங்களுக்கு எது வேணும்னாலும் எங்கிட்டச் சொல்லுங்கம்மா! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குறையும் வைக்கப்பிடாதுன்னு ஐயாவே சொல்லியிருக்காரு” என்று புரொடக்க்ஷன் மானேஜர் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஊர் திரும்புவதற்குச் சில நாட்கள். இருக்கும்போது அழகான டீலக்ஸ் படகு வீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்து மேரியோடும் சுமதியோடும் அதில் தங்கினார் தயாரிப்பாளர் கன்னையா. யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லாரும் முதலில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இருந்தார்கள். ஏரி வாசம் மனோரம்யமாகத்தான் இருந்தது. மேஜை அலங்கரிப்புக்கான பூக்கள் விற்பவர்களும், பழங்கள், காய்கறிகள் விற்பவர்களும் படகுகளிலேயே ஏரியில் வந்து விற்பனை செய்தார்கள். பக்கவாட்டில் கருநீல நிறம் கப்பிய மலைமுகடுகளும், நெடிது நெடிதாக வளர்ந்த சினார் மரங்களும், கண்ணாடியைப் பதித்தாற்போன்ற நீர்ப்பரப்பும் வனப்பும் மிக்க சூழ்நிலைகளாக இருந்தன.

பொழுது போவது மட்டும் கடினமாக இருந்தது. சுடச் சுடத் தேநீர் அருந்திய வண்ணமாக இருந்தார்கள் அவர்கள். கன்னையாவும், மேரியும் வற்புறுத்தியது பொறுக்க முடியாமல் படகு வீட்டில் அவர்களோடு அமர்ந்து சீட்டாடினாள் சுமதி. சீட்டாடுவது சலித்தபின் வேறொரு திறந்த படகில் ஏரியைச் சுற்றிவரலாம் எனறாா கன்னையா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/112&oldid=1131740" இலிருந்து மீள்விக்கப்பட்டது