பக்கம்:அனிச்ச மலர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அனிச்ச மலர்

 வற்புறுத்தியும் அங்கே இங்கே அழைத்துச் சென்றும் அடுத்தநாள் மாலைக்குள் அவர்கள் அவளைச் சரிக்கட்டி விட்டார்கள்.

தனது மாறுதலான நிலைமை, யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் தெரியும்படி நடந்து கொள்வதுதான் தன்னை அதிகம் காட்டிக் கொடுத்துவிடும் என்று எண்ணிச் சுபாவமாகவும், கலகலப்பாகவும் எல்லாரிடமும் பழகினாள் சுமதி. அவளே சமாளிக்கத் தயாராகியிருந்தாள்.

காஷ்மீரில் அவுட்டோர். ஷூட்டிங் நடந்து முடிந்து டில்லி திரும்பியதும் அங்கே இரண்டு நாள் தங்கினார்கள் அவர்கள். அந்த இரண்டு நாளில் சுமதியை யாரிடத்தில் அறிமுகப்படுத்தினாலும் "எங்கள் புதுப் படத்தின் கதாநாயகி' என்று கன்னையா அறிமுகப்படுத்தினார். மேரியும், கன்னையாவும், முக்கியமாகத் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் சுமதியையும் உடனழைத்துச் சென்றனர். அவளைத் தனியே விடவே இல்லை.

அவர்கள் சென்னைக்கு விமானத்தில் திரும்பிய நேரம் இரவு ஏழு மணிக்கு மேலிருந்ததனால்-மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து சுமதி நேரே ஹாஸ்டலுக்குச் செல்வதா, அல்லது மேரி வீட்டிலாவது கன்னையா வீட்டிலாவது அன்றிரவு தங்கிவிட்டு அப்புறம் மறுநாள் காலை ஹாஸ்டலுக்கு மதுரையிலிருந்து இரயிலில் வந்து இறங்கியவளைப் போலச் செல்வதா என்ற யோசித்தார்கள்.

"என்னோடு வா! காலையில் டாக்ஸியில் அனுப்பி விடுகிறேன்” என்றாள் மேரி. சுமதியும் சம்மதித்தாள். கன்னையாவோடு போய் அவருடைய புரொடக்க்ஷன் அலுவலகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்ட பின்பு தான் அவர்கள் இருவரும் செயிண்ட் தாமஸ் மவுண்டுக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்கள்.

மேரி வீட்டில் அன்றிரவு சுமதிக்கு உறக்கம் வர வில்லை. மனத்தில் பல நிகழ்ச்சிகள் உறுத்திக் கொண்டி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/118&oldid=1131725" இலிருந்து மீள்விக்கப்பட்டது