பக்கம்:அனிச்ச மலர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அனிச்சமலர்


வேண்டியிருந்தது என்றெல்லாம் தெரிந்திருந்தது. அதனால் சுமதிக்கும் இலைமறை காயாகச் சில விஷயங்கள் புரிந்திருந்தன.

எப்படியோ படிப்பில் மெல்ல அக்கறை போய், நடிக்க வேண்டும், புகழ்பெற வேண்டும். பல லட்சம் இளைஞர்கள் தன்னை எண்ணி ஏங்கித் தவிக்கச் செய்ய வேண்டும் என்பதில் அவளுக்கு ஆசை வந்துவிட்டது. ஒரு நிலையில் அது ஏக்கமாகவும் மாறிவிட்டது.

சுமதி குளியலறையிலிருந்து வெளியே வந்து அறைக்குள் அமர்ந்து கைக்குக் கிடைத்த ஒரு சினிமாப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அவளுக்கு ஏக்கப் பெருமூச்சு வந்தது.

கையில் எடுத்துப் பிரித்த பத்திரிகையில் 'எனக்கு வரும் இரசிகர் கடிதங்களுக்குப் பதில் போடவும் ஆட்டோ கிராப் போடவுமே நேரம் இருப்பதில்லை. அதற்காக மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு காரியதரிசிகளையே தனியாக நியமித்துவிட்டேன்” என்று ஒர் இளம் நடிகை பேட்டியில் சொல்லியிருந்தது அவள் பிரித்த பக்கத்தில் வந்திருந்தது.

2

சுமதியின் கனத்த நெஞ்சகங்கள் மேலெழுந்து விம்மித் தணிந்தன. நான் இவ்வளவு பிரபலமாகும்போது எனக்கு வரும் கடிதங்களைக் கவனித்துப் பதில் போட வேண்டியிருக்கும் என்று தனக்குத் தானே சொல்லி-அப்படிச் செயற்கையாகச் சொல்லிக் கொள்வதில் கிடைக்கும் கற்பனைச் சந்தோஷத்தில் பூரித்தாள் அவள். பத்திரிகையில் வந்திருந்த அந்த நடிகையின் அழகையும் தன் அழகையும் ஒப்பிட்டு, தான் பல மடங்கு மேலானவள் என்று முடிவு செய்துகொண்டாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/12&oldid=1146830" இலிருந்து மீள்விக்கப்பட்டது