பக்கம்:அனிச்ச மலர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

121



17

ந்த அதிகாலையில் வீட்டு வராந்தாவில் சுமதியைப் பெட்டி சாமான்களோடு பார்த்தபோது தயாரிப்பாளர் கன்னையா ஒன்றும் ஆச்சரியப்பட்டதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.

"வாம்மா! காபி சாப்பிடறியா?” என்ற சுபாவமாக வரவேற்றார். அவர் கேட்காமல் அவளாகவே கல்லூரி விடுதியில் நடந்ததை எல்லாம் அவரிடம் சுருக்கமாகச் சொல்லத் தொடங்கினாள்.

"நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா! நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை? பெட்டி சாமன்களை உள்ளாரக் கொண்டு போய் வை. மேரியும் இப்ப வந்துடுவா” என்று இதமாகவும் ஆறுதலாகவும் மறுமொழி கூறினார் கன்னையா. காபி வரவழைத்து அவரே ஆற்றிக் கொடுத்துப் பருகச் செய்தார். -

"இனிமே உனக்கெதுக்கும்மா காலேஜுப்படிப்பு? நீ ஸ்டாராகி ஜொலிக்கிறதுக்குன்னே பிறந்தவ. உனக்கிருக்கிற முகவெட்டு இங்கே எந்த சீனியர் ஹீரோயினுக்கு இருக்குது?”-

இப்படி ஏதாவது யாராவது இதமாகச் சொல்ல மாட்டார்களா என்றுதான் சுமதியின் மனமும் அன்று ஏங்கிக் கொண்டிருந்தது. வார்டனின் கடுமையான வார்த்தைகளுக்கும் உதாசீனத்திற்கும் பிறகு இங்கிதமாக வருடிக் கொடுப்பது போன்ற கன்னையாவின் சொற்கள் அவளைக் கவர்ந்தன. அவளுக்கு மன ஆறுதலை அளித்தன.

அதே வீட்டில் தம்முடைய ஏ.சி. அறைக்குப் பின்னால் பக்கவாட்டில் வாசல் உள்ள ஓர் அறையைச் சுமதியின் உபயோகத்துக்காகத் திறந்து விட்டார் கன்னையா. சிறிது நேரத்திற்கெல்லாம் மேரியும் வந்து சேர்ந்து விட்டாள். அவள் நடந்த விவரங்களைச் சுமதியிடம் கேட்டுக் கொண்டு வார்டனைக் கன்னா பின்னாவென்று ஏசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/123&oldid=1131712" இலிருந்து மீள்விக்கப்பட்டது