பக்கம்:அனிச்ச மலர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அனிச்ச மலர்


"இந்த மாலதி சந்திரசேகரன் பெரிய பத்தினியோ? எனக்குத் தெரியும் அவ கதை எல்லாம், சொன்னால் ஊர் நாறும்’-என்றாள் மேரி. "நீ அங்கே போகவே வேண்டாம்! அடுத்த வாரத்திலேருந்து புதுப்பட வேலைகள் ஆரம்பமாயிடும். இங்கே இருந்து டான்ஸ் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கத்துக்கப் பாரு.”

"அதுவரை இங்கேயே தங்கிக்கட்டுமா? அல்லது உன்கூட 'செயிண்ட் தாமஸ்' மவுண்டுக்கு வந்துடட்டுமா ?”

"ஏன் இங்கேயே இரேன்! அதெல்லாம் கன்னையா ராஜ போகமாகக் கவனிச்சிப்பாரு. கவலைப்படாதே"_என்று சொல்லிக் கண்களைச் சிமிட்டினாள் மேரி.

சுமதி அந்தத் தயாரிப்பு அலுவலக வீட்டிலேயே தங்கினாள். அவளுடைய உதவிக்காக ஒர் ஆயாக் கிழவியை வேலைக்கு அமர்த்தினார் தயாரிப்பாளர் கன்னையா.

டான்ஸ் கற்றுக் கொள்வது துரிதப்படுத்தப்பட்டது. அவள் அந்த வீட்டிற்குக் குடிவந்த மறுநாள் தரணி ஸ்டுடியோ சென்று சில 'ஸ்டில்ஸ்’ பத்திரிகை விளம்பரத்திற்காக எடுத்தார்கள்.

அந்த வார இறுதியில் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து விட்டு அங்கே வார்டன் தன்னிடமிருந்த பத்திரி கைக் கட்டிங்ஸில் இருந்து விலாசமும் சொல்லியதால் தேடிக் கண்டு பிடித்தோ என்னவோ சுமதியின் தாய் நேரே கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேடி வந்தபோது மாடியில் டான்ஸ் மாஸ்டரிடம் நாட்டியம் கற்றக் கொண்டிருந்தாள் அவள். கால்களில் சதங்கை கட்டிப் பரத நாட்டியத்துக் கேற்ற வகையில் உடையணிந்து மாஸ்டர் சொல்லியபடி ஆடிக் கொண்டிருந்தவள், திடீரென்று வாசல் முகப்பில் அம்மா வந்து நின்றதைப் பார்த்ததும் ஒன்றுமே தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/124&oldid=1131625" இலிருந்து மீள்விக்கப்பட்டது