பக்கம்:அனிச்ச மலர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

125


மனுஷங்களோட பத்துநாள் காஷ்மீர் போறது, பதினைஞ்சு நாள் கன்னியாகுமரி போறதுன்னு புறப்படறத்துக்கு முன்னாடி உடம்பு கூசலியாடீ உனக்கு.”

பதில் சொல்லாமல் சுமதி மேலும் பெரிதாக விசும்பி அழுதாள். உடம்பு கூசாமல் அப்படிப் புறப்பட்டுப் போனதால் தான் எதை இழந்தாளோ அதை அம்மாவிடம் சொல்வதற்கும் வாய் வரவில்லை அவளுக்கு. ஆனால் அம்மா கேட்ட கேள்வியில் காஷ்மீரில் நடந்தது நினைவு வந்து கோவென்று கதறி அழுதபடி தாயின் நெஞ்சில் சாய்ந்தாள் அவள். பெண்ணின் அழுகையைத் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டாள். தான் கேட்டதெல்லாம் உறைத்துப் பெண் மனம் மாறி அழுகிறாள் என்று எண்ணிக் கொண்டு, “என்னவோ உன் கெட்ட வேளை இதுவரை பண்ணின தப்பெல்லாம் பண்ணியாச்சு. இனி மேலாவது நீ மனசு திருந்தணும்டீ. நீ படிச்சுக்கூட எனக்கு ஒண்ணும் ஆகவேண்டியதில்லே. குடும்பப் பேரைக் கெடுத்துச் சீரழிஞ்சுபோய் நடுத் தெருவிலே நிற்கும்படி ஆயிடப்படாது. பேசாமல் என்னோட புறப்பட்டு மதுரைக்கு வந்துடு. வீட்டிலே இருந்து படிக்க முடிஞ்சது போறும். உனக்குப் பிரியம்னா அடுத்த வருஷம் மதுரையிலேயே எந்த லேடீஸ் காலேஜிலியாவது சேரலாம். இல்லேன்னா அதுகூட வேண்டாம்"-- என்று ஒரளவு சகஜமான குரலில் ஆரம்பித்தாள் சுமதியின் அம்மா. சுமதி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. எந்தக் களங்கம் வந்துவிடக் கூடாது என்றும், வரவில்லை என்றும் நம்பி அம்மா தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாளோ அந்தக் களங்கத்தையே தான் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. பெண்ணின் அழுகை அதிகமாக அதிகமாகத் தாயின் கனிவும் அதிகமாகியது. தன்னைத் தழுவினாற் போல நெஞ்சில் சாய்ந்திருந்த மகளின் தலையை ஆதரவாக வருடியபடி அறிவுரைகளைக் கூறலானாள் தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/127&oldid=1117349" இலிருந்து மீள்விக்கப்பட்டது