பக்கம்:அனிச்ச மலர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

159

கூடாது?" என்று கேட்கிறார்கள். நான் கண்டித்து நீ அடங்க மாட்டாய் என்று சொன்னால் ஒருவேளை அதை அவர்கள் நம்புவதற்கு மறுக்கலாம். யார் யார் தலையில் எப்படி எப்படி எழுதியிருக்கிறதோ அப்படித் தான் நடக்கும். எழுதினதை மாத்தி எழுத முடியப் போறதில்லை. என்னுடைய இந்தக் கடிதம் உனக்கு கோபமூட்டலாம். இதை நீ கிழித்துக் கூடப்போட்டுவிடுவாய். ஆனால் இந்தக் கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விஷயங்களை என்றாவது ஒருநாள் நீயாகவே மறுபடி நினைவு கூர்வதற்கு நேரிடும் என்பது நிச்சயம். அப்போதுதான் நான் சொல்கிற நியாயங்கள் உனக்குப் புரியும். அதுவரை அவை உனக்குப் புரிவது சிரமம்.

இப்படிக்கு
உனக்குத் தாயாக நேர்ந்த
துர்ப்பாக்கியவதி.

கடிதத்தில் எழுதியிருந்த சில வாக்கியங்களால் அம்மா சுமதியின் மனத்தை ஒரு கலக்குக் கலக்கியிருந்தாள் என்றாலும் சுமதி அதை மறக்க முடிந்தது. அந்தக் கடிதத்தை அவள் படித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஸி. அறையில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சுமதி டெலிபோனில் ஏ.ஸி. அறையைக் கூப்பிட்டு 'வரலாமா?’ என்று கேட்டாள் அவர்கள் வரச்சொன்னார்கள்.

"ஓ. எஸ். வித் பிளஷர் யூஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்றாள் மேரி. அன்று முதன் முதலாகத் தானே விரும்பி அவர்களோடு சேர்ந்து குடிப்பதற்குச் சென்றாள் சுமதி. அவளுக்கு அப்போது அம்மாவை மறக்க வேண்டியிருந்தது. அம்மாவின் கடிதத்தை மறக்க வேண்டியிருந்தது. கடந்த காலத்தை மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மிதக்க எதன் உதவியாவது தேவைப் பட்டது. முன்பெல்லாம் பிறர் வற்புறுத்தலுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/161&oldid=1147394" இலிருந்து மீள்விக்கப்பட்டது