பக்கம்:அனிச்ச மலர்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

167


பார்த்துக்கிட்டு நீ சும்மா இரு போதும்” என்றுதான் மேரி சுமதியிடம் அப்போது பதில் சொன்னாளே ஒழிய கன்னையாவை விட்டுக் கொடுத்து எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் "உன் லோனை அவரிட்டச் சீக்கிரம் திருப்பி வாங்கிடு! அதிலே மெத்தனம் வேண்டாம். ஒருபிடிப்புமில்லாம ஆளை நம்பி வாய் வார்த்தையை நம்பி லட்ச ரூபாய் கடன் கொடுக்கிற அதிசயத்தை நான் இப்பத் தாண்டி சுமதி கேள்விப்படறேன்" என்று மீண்டும் இரண்டாவது முறையாக சுமதியை எச்சரித்தாள் மேரி. முன்பெல்லாம் மேரி இப்படி எச்சரிக்கும்போது வழக்கமாகச் சொல்லுகிற ’எங்கேடீ போகுது பணம்?’ என்ற வார்த்தைகளைத் தன்னாலேயே இப்போது சொல்ல முடியவில்லை என்பதைச் சுமதி உணர்ந்தாள். அவள் உள்ளுணர்வு விழிப்படைந்திருந்தது.

இந்த அதிர்ச்சி போதாதென்று வேறோர் அதிர்ச்சியும் சுமதிக்கு அன்று ஏற்பட்டது.

மேரியின் இரகசிய ஏற்பாட்டின் படியும், அறிவுரையின் படியும் தன் உடல்நிலை குறித்து மாதவிடாய்க் காலம் தப்பிவிடாமல் பேணுவது குறித்தும் சுமதி அருகிலேயே ஒருலேடி டாக்டரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.

“இங்கே வந்தாச்சு! இனிமேத் தாறுமாறா யார்யாரோடவோ எப்பிடி எப்பிடியோ இருக்கறாப்பல ஆயிடும். லேடி டாக்டரைத் தவறாமப் பார்த்துக்கோ. இல்லாட்டி வயிறும் புள்ளையுமா நிற்பே. ஜாக்கிரதை” என்று கொஞ்சம் பச்சையாகவே மேரி ஒருநாள் அவளை இது விஷயமாக எச்சரித்திருந்தாள். கன்னையா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த ஒரு லேடி டாக்டரிடம் கூப்பிட்டுக் கொண்டு போய் மேரியும், கன்னையாவுமே சுமதியை அந்த டாக்டரம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள். சுமதியும் இரவுகளையும், பகல்களையும், நிகழ்ச்சிகளையும் ஞாபகம் வைத்திருந்து அந்த டாக்டரம்மாவைச் சந்தித்து ஊசிகள் போட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/169&oldid=1115395" இலிருந்து மீள்விக்கப்பட்டது