பக்கம்:அனிச்ச மலர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அனிச்ச மலர்

 அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் உடனே நமது அலுவலகத்திற்கு வந்து சந்திக்க வேண்டுகிறோம்' என்ற அவர்களிடமிருந்து பதில் வருவதாகவும் தானே எண்ணிப் பார்த்துக் கொண்டாள் அவள். கற்பனை என்பது மனித மனத்துக்கு எந்தச் செலவுமின்றித் தானே கிடைக்கிற போதைப் பொருள். மனத்தைத் தட்டிவிட்டால் எதையும் உள்ளே செலுத்தாமலே கற்பனைப்போதை அங்கே உருவாகிவிடும். அந்த போதை அவளுள்ளும் அன்றைக்கு உருவாகியிருந்தது

கற்பனை என்பது நிஜமில்லை. ஆனால் நிஜங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை அல்ல. இன்றைய கற்பனைகள் நாளைய நிஜங்களாகலாம் ! நாளைய கற்பனைகள் நாளை மறுநாள் நிஜங்களாகலாம். ஆகாமலேயும் போய்விடலாம். ஆனால் அப்படி ஆகாமல் போகுமென்று பயந்தோ தயங்கியோ வாழ்வில் யாரும் எந்தக் கற்பனைகளையும் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. கற்பனைகள் தாராளமாகச் செய்யப்படுகின்றன.

மாணவி சுமதியின் கற்பனைகள் நாட்கணக்கில் நீடித்தன. மறுநாளைக்கு மறுநாள் காலை முதல் தபாலில் அவளுக்கு ஒர் கனமான உறை வந்தது. உறையின்மேல் அனுப்புகிறவர் முகவரி இருக்கவேண்டிய இடத்தில் 'சொப்பன உலகம் நாடகக் குழுவினர்-தபால் பெட்டி எண்... கோடம்பாக்கம் சென்னை-26' என்று அழகாக அச்சிட்டிருந்தது. பெறுகிறவர் முகவரியில் புது டைப்ரைட்டரில் அடித்தாற் போன்று முனை முறியாத தெளிவான எழுத்துக்களில் மிஸ். கே. சுமதி... என்று தொடங்கி அவளுடைய கல்லூரி விடுதி முகவரி டைப் அடிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்திலிருந்த பாலன் நாடகக் குழு என்ற பெயரும் சொப்பன உலகம் என்ற புதுப்பெயரும் வேறுபட்டன.

ஆவலால் படபடக்கும் மனமும், மகிழ்ச்சியின் மிகுதியான எதிர்பார்த்தலால் நடுங்கும் கைகளுமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/18&oldid=1134542" இலிருந்து மீள்விக்கப்பட்டது