பக்கம்:அனிச்ச மலர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

183


எல்லா வாயிற் கதவுகளும் தனக்கு அடைக்கப்பட்டு விட்டதுபோல அவளுக்குத் தோன்றியது.

மேற்குப் பக்கமாகப் போனால் அவளுக்குப் பழக்க மான அந்தக் கல்லூரியும், அதன் விடுதியும் இருந்தன. கிழக்குப் பக்கமாகப் போனால் எல்லையற்ற கடல் இருந்தது. தெற்கே போனால் மயிலாப்பூர்க் குளமும் கோயிலும் இருந்தன. வடக்கே போனால் மவுண்ட் ரோடும், மதுரைக்குப் போக எழும்பூர் ரயில் நிலையமும் நகரின் இதயமான பகுதிகளும் இருந்தன. சாலையின் நடுவேயிருந்த 'சிக்னலில்' இயக்கம் இல்லை. அதை இரவுக்காக ஆஃப் செய்திருந்ததால் எந்தப் பக்கத்தில் போகலாம் எந்தப் பக்கத்தில் போகக் கூடாது என்று அது வழிகள் எதையும் சுட்டிக் காண்பிக்கவில்லை.

"மலர்வதற்கு முன்பே வெம்பி வாடிவிடும் மலர் களுக்கு அப்புறம் மலர்ச்சி என்பதே இல்லை. பெண் அனிச்ச மலரைப் போன்றவள். அவள் சிறிது வாடினாலும் கருகி அழிந்துவிடுவாள்” என்று அம்மா முன்பு தனக்கு எழுதி யிருந்த பழைய எச்சரிக்கை கடிதத்தின் நிஜமான அர்த்தம் இப்போது அநாதையாய் இப்படி நடுத்தெருவில் நிற்கும் போதுதான் சுமதிக்குப் பட்டவர்த்தனமாகப் புரிந்தது. ஆனால் திருத்த முடியாத எல்லைக்கு, மலர முடியாத எல்லைக்கு இன்று அவள் வாடிப் போயிருந்தாள். அது அவளுக்கு விளங்கியது. இந்த அவலக் கதாநாயகி சுமதி இனி எங்கே போவது? என்ன செய்வது? அது அவளுக்கும் தெரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இப்போது அவள் எதிரே இருந்த 'சிக்னலில்' வழியும் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஓர் இராப்பிச்சைக்காரி போல் தனியாக நாற்சந்தியில் அலங்கோலமாக இன்றைக்கு இந்த வேளையில் நிற்கிறாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/185&oldid=1121977" இலிருந்து மீள்விக்கப்பட்டது