பக்கம்:அனிச்ச மலர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

19



அனுப்பக் கோருகிறோம் என்று அச்சிட்டிருந்த நிபந்தனை புதிதாக இருந்தது. 'நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை'-என்று மாலைத் தினசரிகளில் அவர்கள் செய்திருந்த விளம்பரத்தில் இப்படி ஒரு நிபந்தனை இல்லை என்பது சுமதிக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் போது திடீரென்று நூறு ரூபாய் நிபந்தனை போடப்பட்டிருந்தது. இப்படிப் பல்லாயிரம் பேர்களிடம் நூறு ரூபாய் வீதம் வசூல் செய்தால் லட்சக்கணக்கில் சேர்ந்துவிடும் என்பதும் தெரிந்தது. உடனே நூறு ரூபாய்க்கு எங்கே போவது என்று சுமதி மலைத்தாள். மாதக் கடைசியில் ரூபாய் நூறு கைமாற்றுத் தர அங்கு யாரும் அகப்பட மாட்டார்கள் என்பதையும் அவள் அறிவாள். மாத ஆரம்பமாயிருந்தால் அந்த ஹாஸ்டல் எல்லைக்குள் யாரிடமாவது நூறு ரூபாய் கடன் வாங்குவது என்பது அவளுக்குப் பெரிய விஷயமாயிராது.

கஞ்சத்தனமானவள், கறாரானவள் என்று பெயர் பெற்ற வார்டன் மாலதி சந்திரசேகரனிடமே அவளால் கடன் வாங்கிவிட முடியும். ஆனால் இப்போது மாதக் கடைசி என்பதால் வார்டனிடமும் கையில் பணம் எதுவும் இராது.

கோடி அறையில் இருக்கும் பானுமதியிடம் கேட்டால் ஒருவேளை கிடைக்கலாம். பானுமதி கோவையைச் சேர்ந்த ஒரு பெரிய மில் அதிபரின் மகள். அவளிடம் மாதத்தில் எந்த வாரத்திலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. சினிமாவுக்கு, காபி ஹவுஸுக்கு, கடற்கரைக்குப் போனாலும் கூடவே நாலு தோழிகளுக்கும் செலவழித்துக் கூப்பிட்டுக் கொண்டுபோகக் கூடியவள் பானுமதி. ஆனால் அவளுக்கும் சுமதிக்கும் போன வாரம் ஒரு சின்ன மனஸ்தாபம். ஒருவருக்கொருவர் பார்த்தால் பேசிக்கொள்ளப் பழகத் தடையில்லாத மனஸ்தாபம் தான் என்றாலும் இப்போது அவளிடம் போயா கடன் கேட்பது? என்று தயக்கமாகத்தான் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/21&oldid=1134566" இலிருந்து மீள்விக்கப்பட்டது