பக்கம்:அனிச்ச மலர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அனிச்ச மலர்



தான் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்யும்போது அங்கே பக்கத்தில் யாரும் நின்று ஒட்டுக் கேட்க நேரக் கூடாது என்பதில் சுமதி முன்னெச்சரிக்கை கொண்டிருந்தாள்.

"ஹாய் சுமதி! என்னது? டெலிபோனுக்காக வெயிட் பண்றியா?” என்று விசாரித்துக் கொண்டே அங்கே வந்தாள் ஒரு விடுதித் தோழி.

"ஆமாம்! ஒரே கூட்டமாயிருக்கே... மத்தவங்கள்லாம் பேசிட்டுப் போகட்டும்னு இருக்கேன்..."

"ஏன்? வேறு யாரும் கேட்கக் கூடாதா.. ரகசிய ஃபோனா? யாராவது பாய் ஃபிரண்டா? அல்லது...?”

"இரகசியமாப் பேசணும்னாலே அது பாய் பிரண்டோடதான் இருக்கணும்னு, என்ன விதி? வேற யாரோடவும் இரகசியமாகப் பேசறதுக்கு விஷயமே இருக்காதா?” என்று சிறிதுகூடத் தயங்காமல் உடனே பதிலுக்குக் கேட்டுவிட்டாள் சுமதி.

"நான் உன்னோட மோதத் தயாராயில்லேடீ அம்மா! இப்போ உன் 'மூட்' சரியில்லை போலிருக்கு"-

சொல்லிவிட்டு மெதுவாகச் சுமதியிடமிருந்து நழுவினாள் அந்த மாணவி.

பத்து நிமிடம் காத்திருந்த பின் சுமதிக்கு ஃபோன் கிடைத்தது. -

தன்னுடைய ஆவலை அதிகம் கவர்ந்திருக்கிற-தன் மனம் அதிகமாக எதிர்பார்க்கிற ஒர் இடத்துக்கு ஃபோன் பேசுகிறபோது ஏற்படும் படபடப்பு இப்போது அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

ஃபோன் பேசுகிற இடத்தில் அவளருகே யாரும் இல்லை என்றாலும் சிறிது தொலைவில் சற்றுமுன் அவளுடன் வந்து பேசியவளும் வேறொருத்தியும் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இருவரில் ஒருத்தி தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டி மற்றவளிடம் பேசிக் கொண்டிருக்கவே சுமதியின் கவனம் அவர்கள் பக்கமும் திரும்பி லயித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/24&oldid=1134576" இலிருந்து மீள்விக்கப்பட்டது