பக்கம்:அனிச்ச மலர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

23

ஃபோனில் நம்பர் கிடைத்து எதிர்த் தரப்பில் யாருடைய குரலாவது கேட்ட பின் பெட்டியில் போடுவதற்காகப் பத்துக்காசு நாணயங்கள் சுமதியிடம் தயாராயிருந்தன. எங்கேஜ்டு ஒலிதான் முதலில் வந்தது. சிறிது காத்திருந்து மறுபடி ஃபோன் செய்தபோது அந்த நம்பரில் மணி அடித்தது ஆறுதலாயிருந்தது. யாரோ ஃபோனை எடுத்து 'ஹலோ' என்றார்கள். பத்துக்காசு நாணயங்களைப் போட்டாள் சுமதி.

"பாலன் நாடகக் குழுதானே?”

"இல்லீங்களே... நீங்க யார் பேசறது? முதல்லே அதைச் சொல்லுங்க...”

"சொப்பன உலகம் நாடகக்குழு ஆபீஸா?” என்று அதன் மற்றொரு பெயரைக் குறிப்பிட்டு இரண்டாவது முறையாக விசாரித்தாள் சுமதி. மறுபடியும் பழைய மாதிரியே பதில் வந்தது.

"நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்லே...”

சுமதி தான் யாரென்பதைச் சுருக்கமாக விவரித்தாள்.

"ஓ! அந்த விஷயமா? கொஞ்சம் லயன்லே இருங்க... ஆளைக் கூப்பிடறேன்” என்பதாக எதிர்ப்புறமிருந்து ஒரு தினுசாகப் பதில் வந்தது.

சுமதி அவசர அவசரமாகக் கையிலிருந்த தாளிலிருந்து நம்பரை மறுபடி சரிபார்த்துக்கொண்டாள். அதே நம்பர்தான், சந்தேகமில்லை. ஃபோனை எடுத்தவன் பேசிய விதத்திலிருந்து அந்த டெலிஃபோன் நாடகக் குழுவிற்குச் சொந்தமானது இல்லையோ என்று எண்ணத் தோன்றியது. வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிற மாதிரி ஒரே டெலிபோன் நம்பரில் பலர் ஒண்டுக் குடித்தனம் இருப்பது என்பது சென்னை போன்ற பெரிய நகரத்தில் சகஜம்தான். புது முகங்களுக்காக விளம்பரம் செய்துள்ள அந்தக் கம்பெனியும், இந்த டெலிஃபோன் நம்பரில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிறதோ என்னவோ என்று ஊகிக்க முயன்று ஃபோனில் காத்திருந்தாள் சுமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/25&oldid=1134582" இலிருந்து மீள்விக்கப்பட்டது